கொரோனா ஜனாஸா அடக்கத்தால் மஜ்மா நகரில் மாற்றுக் காணிகள் வழங்க கோரிக்கை - News View

Breaking

Sunday, October 3, 2021

கொரோனா ஜனாஸா அடக்கத்தால் மஜ்மா நகரில் மாற்றுக் காணிகள் வழங்க கோரிக்கை

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகரில் 14 பேர் 14.5 ஏக்கர் காணிகளை இழந்துள்ளனர். இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிடம் திங்கட்கிழமை (27) மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மஜ்மா நகரில் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யும் மையவாடிக்கும் மற்றும் அதன் பாதுகாப்பு வளையத்துக்காகவும் மொத்தமாக 14.5 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஏ.எல்.சமீம் மேலும் தெரிவித்தார்.

இதனால் காணிகளை இழந்துள்ள 14 நபர்களும் பல வருடங்களாக பாதுகாத்து வந்த இருப்பிடங்கள், ஆட்டுத் தொழுவங்கள், மற்றும் பயிர் செய்கைகள் பாதிப்படைந்த நிலையில் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனைக் கருத்திற் கொண்டு பாதிப்படைந்துள்ள நபர்களுக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக எல்லைக்குள் மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment