ஒரு மாதமாக வெடித்து சிதறும் எரிமலை : விமான போக்குவரத்து பாதிப்பு : லா லகுனா நகருக்கு அச்சுறுத்தல், தொடர்ந்தும் நில அதிர்வு - News View

Breaking

Monday, October 18, 2021

ஒரு மாதமாக வெடித்து சிதறும் எரிமலை : விமான போக்குவரத்து பாதிப்பு : லா லகுனா நகருக்கு அச்சுறுத்தல், தொடர்ந்தும் நில அதிர்வு

ஸ்பெயினின் லா பல்மா தீவில் சீற்றத்துடன் காணப்பட்ட கும்ரே வீஜா எரிமலை, கடந்த மாதம் 19ஆம் திகதி வெடிக்கத் தொடங்கியது. எரிமலையில் இருந்து சீற்றத்துடன் லாவா குழம்பு வெளியேறி வருகிறது.

இது மலை முகட்டில் ஆறு போல் வழிந்தோடுகிறது. மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஏராளமான வீடுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்களும், சுற்றியுள்ள நிலங்களும் அழிந்து விட்டன.

எரிமலை வெடிப்பால் அப்பகுதியில் வசித்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை, தூசு மற்றும் சாம்பல் வானில் படர்ந்ததால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லா பல்மா எரிமலை வெடிப்பால் வெளிப்பட்ட கடுமையான தூசு மண்டலம் விமான நிலையத்தைச் சூழ்ந்துள்ளது. விமான நிலையம் மக்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக திறந்து வைக்கப்பட்ட போதும், விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன.

தூசு மற்றும் புகை மண்டலத்தால் விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இன்றும் (18) எரிமலையில் இருந்து சீற்றத்துடன் லாவா குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறுகிறது.

லாவா குழம்பு பல்வேறு முனைகளில் தொடர்ந்து முன்னேறி வருவதால், லா லகுனா நகருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தொடர்ந்து நில அதிர்வும் ஏற்படுகிறது. எரிமலை வெடிப்பு இப்போது முடிவுக்கு வராது என கேனரி தீவுகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment