கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் இப்போது உயர் மட்டத்தில் உள்ளது - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் இப்போது உயர் மட்டத்தில் உள்ளது - அமைச்சர் ஜோன்ஸ்டன்

ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் (I -Road) கீழ் இலங்கை முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் இப்போது உயர் மட்டத்தில் உள்ளதாக ஆளும் தரப்பு கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தான் கடமையை பொறுப்பேற்றபோது, ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் (I-Road) கீழ் செயல்படுத்தப்பட்ட வீதி நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தததாக தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தான் தனிப்பட்ட ரீதியில் இது பற்றி ஆராய்ந்த பின்னர் 3 மாத காலத்தினுள் அவற்றின் முன்னேற்றத்தை சிறந்த மட்டத்திற்கு கொண்டு வருமாறு திட்டப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியதாக கூறினார் .

அதன்படி, இந்த திட்டத்தின் முன்னேற்றம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் (I-Road) முன்னேற்றம், 20% ஆக இருந்ததோடு இன்று 80% ஆக வேகமாக அதிகரித்துள்ளதை உதாரணமாக காட்டிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.    அதே போன்று ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் (I-Road) கீழ் ஏனைய மாவட்டங்களில் வீதி அபிவிருத்தியும் சிறந்த முன்னேற்றத்தை காண்பிப்பதாக கூறினார்.

வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மாகாண பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும் வீதிகளை அளவிடல், மதிப்பீடுகள் தயாரித்தல், கேள்வி மனு கோரல் போன்றவற்றை தாமதமின்றி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

மக்களின் கோரிக்கைகளை மீறி வீதிகள் அமைப்பது தாமதமாகி வருவதாக பொதுமக்களிடமிருந்து தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், கோவிட் தொற்றுநோய் இருந்த போதிலும் அபிவிருத்திப் பணிகள் தொடர வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கைகளை ஒருபோதும் மறுக்கக்கூடாது என்றும் கூறினார்.

ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டமானது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஆரம்பிக்கப்பட்டது தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் கிராமப்புற வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு I-Road மாதிரி பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை பணிப்பாளர் கலாநிதி சென் சென்னுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment