கல்வியையும், விவசாயத்தையும் அரசாங்கம் சீரழித்து நாட்டை பஞ்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது - ஐக்கிய தேசிய கட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

கல்வியையும், விவசாயத்தையும் அரசாங்கம் சீரழித்து நாட்டை பஞ்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது - ஐக்கிய தேசிய கட்சி

(எம்.மனோசித்ரா)

உரப் பிரச்சனையால் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகி வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் வெகுவிரைவில் வரவிருக்கும் உணவுப் பஞ்சத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு புறம் கல்வியையும், மறுபுறத்தில் விவசாயத்தையும் அரசாங்கம் சீரழித்து நாட்டை பஞ்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர் - ஆசிரியர்களை குற்றவாளிகளாக அரச தரப்பினர் பார்ப்பது கல்வியின் அழிவின் அடையாளமாகும்.

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வினை வழங்காத அரசாங்கம் பொலிஸாரையும், கிராமத்திலுள்ள குண்டர்களையும் அனுப்பி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துகின்றது.

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வழங்காமல் 21 ஆம் திகதி அவர்களை பாடசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அதிபர் - ஆசிரியர்களை பொலிஸார் ஊடாக அச்சுறுத்துவதற்கு முயற்சிப்பதை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

அதிபர், ஆசிரியர்கள் சேவைக்கு திரும்பாவிட்டால் அவர்களை பலவந்தமாக அழைத்துச் செல்வதற்கு புலனாய்வுப் பிரிவினரை அனுப்பி அச்சுறுத்துவதாக ஆசிரியர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

21 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூமளிக்காவிட்டால் பயிற்சி ஆசிரியர்கள், அபிவிருத்தி அதிகாரிகளாக சேவையில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை கொண்டு கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.

மறுபுறத்தில் ஆளுந்தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆசியர்களை பழைய முட்டைகளால் தாக்குவதற்கு திட்டமிடுகின்றனர். இவ்வாறானவர்கள் ஒரு நாள் கூட பாடசாலைக்கு செல்லாதவர்களாகவே இருப்பர்.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உறுப்புரை 186 மற்றும் 187 இன் படி, தொழிற்சங்க போராட்டத்தின் போது பணிநீக்கம், இடமாற்றம் அல்லது வேறு எந்த விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் வேறு எந்த சட்டமும் நாட்டின் அரசியலமைப்பை பாதிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் இந்த அரசாங்கம் ஒரு கிராம குண்டர் போல நடந்து கொள்கிறது. ஆசிரியர்களின் போராட்டம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப் புறங்களுக்குச் சென்றால் இதற்கான அறிகுறியை அவதானிக்க முடியும். நகரத்தின் தெருக்களில் அழுகிய காய்கறிகளை வெட்டி விற்கும் விற்பனையாளர்களையும் அவற்றை மலிவாக வாங்கும் மக்களையும் பார்க்க ஆடம்பர கார்களில் இருந்து இறங்கி தெருக்களில் நடந்து செல்ல அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. இலங்கையில் ஏற்கனவே உணவு பற்றாக்குறை உள்ளது என்று மக்கள் கூறுகிறார்கள், அடுத்த ஏப்ரல் மாதம் அல்ல அதற்கு முன்னரே சந்தையில் அரிசி கிடைக்காத நிலைமை ஏற்படும். இந்த நிலைமை தொடர்ந்தால், வரிசையில் நிற்கும் யுகம் மீண்டும் வரும்.

கொரோனாவின் முதல் அலை வந்தபோது, இரண்டாவது அலை வரலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார். அதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவான அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. அவர் கூறியதைப் போல், இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் உருவாகி நாட்டில் பேரழிவு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியாக நாங்கள் அரசாங்கத்தை மீண்டும் எச்சரிக்கிறோம். வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். உரப் பிரச்சனையால் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகி வேறு வேலைகளுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். உரம் தருவதாக அரசு கூறினாலும், விவசாயிகளுக்கு அதில் நம்பிக்கை இல்லை. அவர்களது இத்தகைய அவநம்பிக்கை நியாயமானது.

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். அது நடக்காமல் தடுக்க புத்திசாலித்தனமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கவும். இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாக இருந்தால், அவற்றை மாற்றியமைக்க தயங்காதீர்கள்.

அரசாங்கத் தலைவர்களின் பெருமையை விட அப்பாவி மக்களின் பசி முக்கியத்துவமளிக்கப்பட வேண்டியது. இது பயனற்ற மற்றும் பொய்யான அரசு என்பது இப்போது மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment