ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருவதற்கு முன்பாகவே அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்துள்ளனர் - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருவதற்கு முன்பாகவே அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்துள்ளனர் - லக்ஷ்மன் கிரியெல்ல

(நா.தனுஜா)

2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தினால் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்நோக்கி நகர்த்திச் செல்கின்றது என்று இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தம்மிடம் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாகவே கடந்த இரு வருட காலத்தில் நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நானும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஹர்ஷ டி சில்வாவும் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தபோது அவர்களுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம்.

இதன்போது நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், சட்டத்தில் ஆட்சி வலுவிழந்துள்ளமை, சிவில் சமூக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படல் என்பன தொடர்பில் நாம் அவர்களுடன் கலந்துரையாடினோம்.

இருப்பினும் எந்தவொரு பிரச்சினைகள் காணப்பட்டாலும் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இடைநிறுத்த வேண்டாம் என்று சஜித் பிரேமதாஸ ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி என்பவற்றைப் பாதுகாப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment