வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது : சேவையை நிரந்தரமாக்கி தருமாறு மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஈ.எல்.எம். அஸ்ரப் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது : சேவையை நிரந்தரமாக்கி தருமாறு மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஈ.எல்.எம். அஸ்ரப் வேண்டுகோள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. எனவே தங்களை சேவையில் நிரந்தரமாக்கி தருமாறு ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலைய பட்டதாரி பயிலுனர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இது தொடர்பான ஊடக மாநாடு ஒன்று இன்று (02.10.2021) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஈ.எல்.எம்.அஸ்ரப் இவ்வாறு விளக்கமளித்தார்.

பட்டதாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 3 ஆம் திகதி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டது. அவ்வாறு நியமனம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியும் எங்களுக்கு இதுவரை நிரந்த நியமனம் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பயிலுனர்களாக சேவையாற்றி வரும் எங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக நாம் பல்வேறு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

எங்களுடைய பயிற்சிக் காலம் இவ்வாறு இழுபட்டுப் போகுமாக இருந்தால் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்துடன் எங்களது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சவால்களை நாங்கள் சந்திக்கலாம் என்று அச்சப்படுகிறோம்.

பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் ஏழு நாட்களும் கடமை புரிந்து வருகின்றனர். அங்கு கடமை புரியும் நிரந்தர உத்தியோகத்தர்களுக்கு இடர்கால கொடுப்பனவுகளாக ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆனால் பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டவர்கள் நியமனம் பெற்றவர்கள் போன்று வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இவ்விடயத்தையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேபோன்று, கொரோனா இக்கட்டான காலப்பகுதியிலும் சமுர்த்தி காரியாலயங்களில் ஐந்து நாட்களும் பயிலுனர்களை வேலைக்கு அழைக்கின்றனர். அவர்களுக்கும் எவ்வித மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.

அத்துடன், பாடசாலைகளில் நியமனம் பெற்றுள்ள பயிலுனர்களை பிரதேச செயலகங்களுக்கும் ஏனைய திணைக்களங்களுக்கும் அழைக்கப்படுகின்றனர். இதனால் ஒன்லைன் மூலம் அவர்கள் முன்னெடுக்கும் கற்பித்தல் இடைநிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

அத்துடன் பயிலுனர்களை அங்குமிங்குமாக அழைப்பதால் அவர்கள் ஒரு இடத்தில் வேலை செய்யும் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதில் சிரமப்படுகின்றனர்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளையும் இடைநிறுத்தி பயிலுனர்களை ஒரே இடத்தில் சேவை செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்று மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஈ.எல்.எம். அஸ்ரப் கேட்டுக் கொண்டுள்ளார்.

கேசரி

No comments:

Post a Comment