இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் மலையக மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் வேடிக்கை பார்க்காது - மருதுபாண்டி ராமேஷ்வரன் - News View

Breaking

Wednesday, October 6, 2021

இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் மலையக மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் வேடிக்கை பார்க்காது - மருதுபாண்டி ராமேஷ்வரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் மலையக மக்களுக்கு ஏதாவது பிரச்சினையென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என மருதுபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பெருந்தோட்டப் பகுதிகள் இராணுவமயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பதாகவும் கூறுகின்றனர்.

அரசாங்கம் எதனைச் செய்தாலும் குறைகூறுகின்றனர். அரசாங்கம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு எதனையும் செய்யவில்லையென்றும் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த காலத்தில்தான் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதை மறந்துவிட்டு பேசுகின்றனர்.

தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு குறைகளுடன் காணப்பட்ட 1235 வீடுகள் ஜீவன் தொண்டமானின் இராஜாங்க அமைச்சின் ஊடாக 522 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளரின் ஊடாக மக்களுக்கு கையளித்திருந்தோம்.

பெருந்தோட்டப் பகுதிகளில் காபட் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபிவிருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக எமது நாடு மாத்திரமல்ல பல நாடுகள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளன .பொருளாதார வீழ்ச்சி இருந்தாலும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுக்கின்றார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஒன்றிணைந்து நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான பின்புலத்தில்தான் பெருந்தோட்டப் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுவதாக ஒரு கருத்தை பரப்பி வருகின்றனர்.

நாம் அரசாங்கத்தில் இருக்கிறோம். மலையக மக்களுக்கு ஏதும் பிரச்சினையென்றால் இ.தொ.கா அதனை பார்த்துக் கொண்டிருக்காது. அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எமது மக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் துணை போக மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment