ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய இளைஞர், யுவதிகளே நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய இளைஞர், யுவதிகளே நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

மாற்றத்தை எதிர்பார்த்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இளைஞர் யுவதிகள் ஆதரவு வழங்கினார்கள். பின்னர் நாட்டை அழகுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். இன்று அந்த இளைஞர்கள்தான் நாட்டை விட்டு வெளியேற குடியகழ்வு, குடிவரவு திணைக்களத்தின் முன்பாக காத்திருக்கிறார்கள் என தேசிய ஆடையுற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17 ) இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட சம்மேளன கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வைத்தியர்கள், பேராசிரியர்கள் மற்றும் படித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் உள்ளார்கள்.இவர்கள் நாட்டை விட்டு சென்றால் முட்டாள்கள்தான் நாட்டில் மிகுதியாகுவார்கள். இந்த அவலநிலையை மாற்றியமைக்க இளம் தலைமுறையினர் அரசியலில் ஈடுபட வேண்டும்.

இளம் தலைமுறையினர் பாரம்பரிய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டு மாற்றத்தை எதிர்பார்த்து அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு இளைஞர் யுவதிகள் முழுமையான ஆதரவை வழங்கினார்கள். நாட்டை அழகுபடுத்தும் செயற்பாடுகளில் இளைஞர்கள் தன்னிச்சையாக ஈடுபட்டார்கள்.

ஆனால் இன்று அந்த இளைஞர் யுவதிகள்தான் நாட்டை விட்டு எப்போது வெளியேறுவது என எதிர்பார்த்துள்ளார்கள். குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இளைஞர் யுவதிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதன் ஊடாக இதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்தளவிற்கு தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலைமை மீது அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அறிவார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது நாட்டின் முன்னேற்றம் கேள்விக்குறியாக்கப்படும்.

வைத்தியரகள், பேராசிரியர்கள், படித்தவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். படித்தவர்களும், தொழில்துறையினரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டில் முட்டாள்கள்தான் மிகுதியாகுவார்கள். மிகவும் மன வருத்தத்துடன் இதனை குறிப்பிடுகிறேன், எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment