அரசாங்கத்தை விமர்சிக்காதவர்களை இனங்காண்பது கடினமாகவுள்ளது : தேர்தல் இடம்பெற்றால் மக்கள் உறுதிப்படுத்துவார்கள் - விஜயபால ஹெட்டியராட்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

அரசாங்கத்தை விமர்சிக்காதவர்களை இனங்காண்பது கடினமாகவுள்ளது : தேர்தல் இடம்பெற்றால் மக்கள் உறுதிப்படுத்துவார்கள் - விஜயபால ஹெட்டியராட்சி

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தை விமர்சிக்காதவர்களை இனங்காண்பது கடினமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனமான நிர்வாகத்தை மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள். தேர்தல் இடம்பெற்றால் மக்கள் அதனை உறுதிப்படுத்துவார்கள். மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியராட்சி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது. தவறான அரச நிர்வாகத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தவறான நிர்வாகத்திற்கு எதிராக நாட்டு மக்கள் வெகுவிரைவில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

பெரும்போக விவசாய நடவடிக்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. உர பிரச்சினை காரணமாக இம்முறை அதிக விளைச்சலை எதிர்ப்பார்க்க முடியாது. இம்முறை பெரும்போகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும்.

நெல் விளைச்சல் குறைவடைந்தால் அரிசி பற்றாக்குறை ஏற்படும். தேசிய மட்டத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால், அரிசி இறக்குமதி செய்ய நேரிடும். டொலர் பிரச்சினை காரணமாக அதுவும் கேள்விக்குறியாக்கப்படும்.

இரண்டு வருடத்திற்கு பிறகு “ஒரே நாடு - ஒரே சட்டம்” கொள்கை திட்டத்தை செயற்படுத்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தீர்மானத்தின் பின்னணியை மக்கள் நன்கு அறிவார்கள்.

சர்ச்சைக்குரிய சீன நாட்டு உரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் இதுவரையில் நாட்டு மக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீன நாட்டு உரம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் பலவந்தமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. சீனா நிச்சயம் அந்த உரத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் என்பதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.

அரசாங்கத்தை விமர்சிக்காதவர்களை இனங்காண்பது கடினமானதாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை எண்ணி மக்கள் தம்மை தாமே நிந்தித்துக் கொள்கிறார்கள்.

மாகாண சபை தேர்தலையும், உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது. மக்களாணைக்கு மதிப்பது உண்மையாயின் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டை பொறுப்பேற்க எதிர்க்கட்சி தலைவர் தயாராகவுள்ளார். அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு எமது ஆட்சியில் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment