கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 நாடுகள் இறுதி செய்த முக்கிய ஒப்பந்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்தது 15 சதவீத வரி : ஜி20 நாடுகள் இறுதி செய்த முக்கிய ஒப்பந்தம்

பெரு நிறுவனங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதமாவது வரி விதிக்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு, உலகின் 20 முக்கிய பொருளாதாரங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒப்புதலளித்துள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைவான வரி விதிக்கும் நாடுகளுக்கு திசை திருப்பி விடும் பிரச்சனையைத் தொடர்ந்து இப்படி ஒரு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரோம் நகரத்தில் நடந்த, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாட்டுத் தலைவர்களும் இந்த ஒப்பந்தத்துக்கு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.

உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா போன்ற பிரச்சனைகளும் உள்ளன. பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஜி20 நாட்டுத் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு இது.

19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய ஜி20 குழுவில் சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் ஆகிய இருவர் மட்டும் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி வழியாக கலந்து கொண்டனர்.

அமெரிக்கா முன்மொழிந்த இந்த வரி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகாரபூர்வமாக பின்பற்றப்படும் என ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது. 2023ம் ஆண்டில் இது அமுல்படுத்தப்படும்.

உலக பொருளாதாரத்துக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒரு "முக்கிய தருணம்" என்றும், "குறைவாக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடும் கார்ப்பரேட் வரி பிரச்சனையை குறைக்கும்" என்றும் அமெரிக்க கருவூல செயலர் ஜனெட் யெல்லன் கூறினார்.

பல அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் அதிகம் வரி செலுத்த வேண்டி இருந்தாலும், அமெரிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வரி ஒப்பந்தத்தின் மூலம் பலனடைவார்கள் என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

ஜி20 மாநாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் எதிரொலிக்கலாம். இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டை ஒற்றுமைக்கான செய்தியோடு தொடங்கி வைத்தார். 

"தனியாக அதைக் கடப்பது இனி ஒரு வழியல்ல. நம்மிடையில் உள்ள வேறுபாடுகளைக் கடக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என உலக தலைவர்கள் மத்தியில் பேசினார் மரியோ.

உடனடியாக கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் எதிர்காலம் மோசமாக இருக்குமென நிபுணர்கள் தொடர்ந்து பல எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் என்பது "மனித குலத்தின் முன்னிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்" என கூறினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். மேலும் "அது மனித நாகரிகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளது" என்றார்.

ஜி20 உச்சிமாநாடோ, பருவநிலை மாற்ற மாநாடோ உலக வெப்பமயமாக்கலை தடுக்க முடியாது என ஒப்புக் கொண்டார் பிரதமர் போரிஸ் ஜான்சன். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், "உலகின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பை தடுக்க முடிந்தால் "புவி வெப்பமயமாக்கலை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.

உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த ஜி20 நாடுகளின் வாக்குறுதிகளை வரைவு அறிக்கை ஒன்றில் பட்டியலிட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது. 

மேலும் அதற்கு அர்த்தமுள்ள மற்றும் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கும் செயல்பாடுகள் தேவைப்படும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது ராய்டர்ஸ்.

முன்னேறும் நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலரை மக்களிடமிருந்தோ, தனியாரிடமிருந்தோ திரட்ட முன்னேறிய நாடுகள் ஒப்புக் கொண்டன, அதை வைத்து வளரும் நாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என 2009ஆம் ஆண்டில் கூறப்பட்டது. ஆனால் அப்போது முதல் பணக்கார நாடுகள் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றன. அது எவ்வளவு முக்கியம் என்பதும், தேவை என்பதும் இந்த வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment