சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் : நிரூபமா ராஜபக்ஷவிடம் இந்த வாரம் விசாரணைகள்? - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் : நிரூபமா ராஜபக்ஷவிடம் இந்த வாரம் விசாரணைகள்?

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவிடம் இந்த வாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனிடம் குறித்த ஆணைக்குழு இரு தடவைகள் விசாரித்திருந்த பின்னணியிலேயே, நிரூபமாவிடமும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

நிரூபமா ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுக்க, அவருக்கு கடந்த வாரம் (25 ஆம் திகதி) ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்திருந்த போதும் சுகயீனம் காரணமாக அன்றையதினம் அவரால் ஆஜராக முடியாது என அந்த ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குமூலம் வழங்க பிரிதொரு தினத்தை வழங்குமாறும் அவரால் கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் அவரை விசாரணைக்கு அழைக்க எதிர்ப்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பன்டோரா பேப்பரில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.

அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகேவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment