வட மாகாண அபிவிருத்தி, மக்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்து சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட சகல தரப்புடனும் ஒரே மேசையில் அமர்ந்து பேசி தீர்வுகாண புதிய ஆளுநர் விருப்பம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

வட மாகாண அபிவிருத்தி, மக்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்து சம்பந்தன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட சகல தரப்புடனும் ஒரே மேசையில் அமர்ந்து பேசி தீர்வுகாண புதிய ஆளுநர் விருப்பம் தெரிவிப்பு

வட மாகாண மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இரா. சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளோடு ஒரே மேசையில் அமர்ந்து கலந்துரையாடி அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வடக்கின் அபிவிருத்தி, மக்களின் பிரச்சினைகள் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வடக்கின் அரசியல்வாதிகள் எழுத்து மூலம் தமக்கு சமர்ப்பித்தால் அது தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்த தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ள அவர், அத்தகையோரது அனுபவங்களையும் பெற்றுக் கொண்டு மக்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் ஒரு அரசியல்வாதி அல்ல என்பதை சுட்டிக்காட்டிய வட மாகாண ஆளுநர் அரசியல் தவிர்ந்த, வட மாகாணத்தில் அரசியல் பிரதிநிதிகளால் முன்வைக்கப்படும் மக்களுக்கான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராய்ந்து அரசாங்கத்திடமிருந்து அதற்கான ஒத்துழைப்புக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வட மாகாண ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஜீவன் தியாகராஜா தமது பதவிக் காலத்தில் வட மாகாணத்தின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அது தொடர்பில் அங்குள்ள்ள அரசியல்வாதிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

தினகரன் சார்பில் அவரிடம் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்னை ஏற்கனவே அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் 1980 காலங்களிலிருந்து அவரை நான் அறிவேன். அவரது அரசியல் செயற்பாடுகள் அனுபவங்களையும் நான் அவதானித்துள்ளேன். 

சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தபோது வடக்கில் நிலவும் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் மட்டும் பொது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். 

வடக்கில் தமிழ் அரசியல்வாதிகள் அங்குள்ள மக்களின் வாக்குகளையே அடித்தளமாகக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் மக்களின் பிரச்சினைகளை அவர்கள் எழுத்து மூலமாக சமர்ப்பிப்பார்களானால் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment