பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் : முடிவுக்கு வந்த சினிமா பயணம் - முழுத் தொகுப்பு இதோ - News View

About Us

About Us

Breaking

Friday, October 29, 2021

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் : முடிவுக்கு வந்த சினிமா பயணம் - முழுத் தொகுப்பு இதோ

கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டுசெல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது.

தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித். ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அவர் சேர்க்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனைக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல ரசிகர்களின் மனதை வென்ற கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை மற்றும் மறக்க முடியாத சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

சென்னையில் பிறந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா ராஜ்குமாருக்கு ஐந்தாவது குழந்தையாவார். 

இவரது உண்மையான சிறு வயது பெயர் லோஹித். புனித் ஆறு வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது. பத்து வயது வரை அவரது தந்தை, புனித் மற்றும் அவரது சகோதரி பூர்ணிமாவையும் திரைப்பட தொகுப்புகளுக்கு அழைத்து வருவார். இவரது மூத்த சகோதரர் தான் பிரபல நடிகர் சிவ ராஜ்குமார்.

புனித் ராஜ்குமார் 1999 ஆம் ஆண்டு அஸ்வினியை மணந்தார். இவர்களுக்கு வந்திதா மற்றும் த்ரிதி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

புனித் ராஜ்குமார் அவரது தந்தையின் திரைப்பட செட்டுகளுக்கு அடிக்கடி சென்றதால், அவர் நடிப்பை நன்கு கற்றுக் கொண்டார். 16 படங்களுக்கு மேல் பணியாற்றிய புனித் தொழில்துறையின் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராகவும் இருந்தார்.

புனித் ராஜ்குமார் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைப்படத்தில் தோன்றினார் என்பது பலருக்கும் தெரியாது. 1976 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமதா கனிகே' என்னும் திரைப்படத்தில் அவரது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.

ஷெர்லி எல் அரோராவின் 'என்ன அப்புறம் ராமன்?' நாவலை அடிப்படையாகக் கொண்டு என்.லட்சுமிநாராயண் இயக்கிய 'பேட்டடா ஹூவு' திரைப்படத்திற்காக புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதைப் பெற்றார். அப்படத்தில் அப்பாவி ராமுவாக புனித் நடித்திருந்தார்.
புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல. இவர் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமாரைப் போலவே ஒரு நல்ல பாடகர். இவர் ஆறு வயதாக இருக்கும் போதே, பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த 1982ம் ஆண்டு வெளியான பாக்யவந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற "பானா தாரியல்லி சூர்யா" என்ற தனது முதல் பாடலைப் பதிவு செய்தார்.

புனித் ராஜ்குமார் 1982-83 இல் வெளியான 'சாலிசுவ மொதகலு' திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக தனது முதல் கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.

கன்னட திரையுலகில் அப்பு மற்றும் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இதில் அப்பு என்ற பெயரானது 'அப்பு' திரைப்படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் புனித் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானார். 

தொடர்ந்து அரசு, மிலானா, வம்சி, ஜாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். கடைசியாக இவரது நடிப்பில் யுவரத்னா என்ற திரைப்படம் வெளியானது. திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் இவர் குவித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமில்லாமல், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைக்கொண்டு விளங்கி இருக்கிறார். 

இவ்வளவு சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் இடம் பெற்ற புனித் ராஜ்குமார் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும், இவரது நினைவுகள் என்றும் மக்கள் மனதில் அழியாது நிலைத்திருக்கும். இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment