காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது? : சட்டமா அதிபர் திணைக்களம் மிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பிரதம நீதியரசர் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்படலாம் - தலதா அத்துக்கோரள - News View

About Us

About Us

Breaking

Thursday, October 21, 2021

காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது? : சட்டமா அதிபர் திணைக்களம் மிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பிரதம நீதியரசர் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்படலாம் - தலதா அத்துக்கோரள

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

காணாமல்போன 11 பிள்ளைகள் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படியாயின் காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது. சட்டமா அதிபரால் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகள் தொடர்பான பொறுப்பும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கே இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு நாடு ஒரு சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். என்றாலும் எமது நாட்டில் தனியார் சட்டம் என்ற ஒன்று இருக்கின்றது. அது சம்பிரதாய முறையில் பேணப்பட்டு வருவதாகும். அதற்கான கெளரவத்தை வழங்க வேண்டும். அதனை பாதுகாத்துக் கொண்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம்.

அதேபோன்று ஒரு நாடு ஒரு சட்டம் எவ்வாறு அமைந்தாலும், தண்டனைச் சட்டம் நாட்டில் இருக்கும் அனைத்து குடிமகனுக்கும் ஒருமாதிரியே இருக்க வேண்டும். குற்றம் செய்தவரின் தராதரம் பார்த்து மாற்றமடைய முடியாது.

ஒரு நாடு ஒரு சட்டம் என தெரிவித்தாலும் தற்போது குற்றவியல் சட்டம் தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.

2015 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதி அளித்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. அந்த காலத்தில் இடம்பெற்று வந்த நிதி மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதாகவே மக்களுக்கு தெரிவித்தாேம்.

அதற்காகவே மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள். அதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அவர்கள் சுயாதீனமாக செயற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். விசேடமாக நீதிபதிகளுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொண்டோம்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபரே அரசாங்கம் தொடர்பான வழக்குகளை மேற்கொள்பவர்கள். அரசாங்கத்துக்கும் அரச தலைவருக்கும் ஆலாேசனை தெரிவிப்பவர்களும் அவர்களாகும். அதனால் அவர்களின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

அதேபோன்று அரச தரப்பினால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து, அது தொடர்பான சாட்சியங்களை பெற்றுக் கொண்டு வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபர் திணைக்களமாகும். அன்று சட்டமா அதிபராக இருந்தவர்தான் இன்று பிரதம நீதியரசராக இருக்கின்றார்.

அதனால் அன்று தற்போதைய பிரதம நீதியரசர் அன்று சட்டமா அதிபராக இருந்து தொடுத்த வழக்குகள், அரசியல் அடிப்படையாக் கொண்டவை என தெரிவிப்பதாக இருந்தால், இன்றைய பிரதம நீதியரசர் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட இடமிருக்கின்றது.

சட்டமா அதிபர் என்பது நபரை அடிப்படையாக் கொண்டது அல்ல. இன்று ஒருவர் இருப்பார் நாளை வேறு ஒருவர் சட்டமா அதிபராக இருப்பார். அதனால் சட்டமா அதிபரால் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகள் தொடர்பான பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. ஆனால் அந்த நிலைமை இன்று இல்லை.

அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பான நம்பிக்கை இல்லாமல் போயிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம்தான் 11 பிள்ளைகள் காணாமல் போன விவகாரத்தில் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட்டிருந்த நபர் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

அப்படியாயின் காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதில்லையா? காணாமல்போன பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை ஏற்றுக் கொள்வது யார்?. இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து சாட்சிகளை பெற்றுக் கொண்டு வழக்கு தொடுத்தால், அது அரசியல் நடவடிக்கை என எவ்வாறு தெரிவிக்க முடியும்? அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம் என மிகவும் வேதனையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

2015 க்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு கீழே இருந்தது. 2015 ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னரே அதனை நீதி அமைச்சுக்கு கீழ் கொண்டு வந்தோம். அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment