மரண தண்டனைக்கு எதிரான பிரேமலால் ஜயசேகரவின் மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 4, 2021

மரண தண்டனைக்கு எதிரான பிரேமலால் ஜயசேகரவின் மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தனக்கு எதிராக இரத்தினபுரி மேல் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்து, தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க, மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு நேற்று பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் பிரதியமைச்சரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சொகா மல்லி என அறியப்படும் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரத்தினபுரி மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட காவத்தை நகரில் கடந்த 2015 ஜனவரி மாதம் 5ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் ஏற்பாடுகளை அழிப்பது மற்றும் காயம் ஏற்படுத்தும் நோக்குடன் சட்டவிரோத கூட்டமொன்றின் உறுப்பினராக இருந்தமை, திட்டமிட்டு நபர் ஒருவரை கொலை செய்தமை, மேலும் இருவரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் கடந்த 2016 செப்டம்பெர் 13 ஆம் திகதி இரத்தினபுரி மேல்நீ திமன்றில் அப்போதைய நீதிபதியாக இருந்த யு.எச்.பி. கரலியத்த முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய சட்டமா அதிபரால் 59 பேரின் சாட்சியங்கள் 16 தடயப் பொருட்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீதிபதி ரொஹான் ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

இரு வருட கால சாட்சி விசாரணைகளை தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்ட பிரதிவாதிகளில் பெலவத்தகே பெதும் தனஞ்சய அல்லது பெலா, ஊருபெலவுவே கமஎதிராலராகே அஜித் மலவி குணவர்த அல்லது மலவி உடஅதா சீலகே அசங்க நாமல் அல்லது சாஜன்டூ , உக்கந்தகே திலங்க பிரதீப் ஆகியோரை பூரணமாக நீதிமன்றம் விடுவித்தது.

அதன் பின்னரே எஞ்சிய பிரதிவாதிகளான பிரேமலால் ஜயசேகரவு உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், முறைப்பாட்டாளரான சட்டமா அதிபர் தரப்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிபதி அம்மூவருக்கும மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராகவே, பிரேமலால் ஜயசேகர மேன் முறையீட்டு மன்றில் மேன் முறையீடு செய்துள்ளார். அம்மனுவே தற்போது, எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது.

No comments:

Post a Comment