நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு முறையான சிந்தனை, வேலைத்திட்டம் இல்லை : பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்படும் - வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு முறையான சிந்தனை, வேலைத்திட்டம் இல்லை : பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்படும் - வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு முறையான சிந்தனை மற்றும் வேலைத்திட்டம் இல்லை. அதன் காரணமாகவே நாடு பாரிய சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கின்றது. அடுத்த வருட நடுப்பகுதியாகும்போது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், விவசாய நடவடிக்கைகளுக்கு சேதன பசளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் இந்த திட்டத்தை படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என்றே நாங்கள் தெரிவித்து வந்தோம்.

விவசாயிகளுக்கான இரசாயண உரம் தடைப்பட்டுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

குறிப்பாக காலி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகள் பாரிய பேரழிவுக்கு முகம்கொடுத்திருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மீண்டும் பெற்றுக் கொண்டு சாதாரண நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் வரை செல்லும் என நாங்கள் நம்புகின்றோம்.

அத்துடன் சர்வதேச நிலையில் உயர்தர உரம் இலவசமாகவோ 350 ரூபாவுக்கு குறைவாகவோ வழங்க முடியாது. என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக, அரசியல்வாதிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய தரம் குறைந்த உரம் எமது மண்ணுக்கு இட்டதால், எமது மண் அழிவடைந்திருக்கின்றது.

ஏனெனில் ஒரு பிரிவினர் 350 ரூபாவுக்கு உரம் வழங்குவதாக தெரிவிக்கும்போது அடுத்த தரப்பினர் இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு நாட்டை கொண்டுசெல்ல முடியாது.

மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எந்தத் தீர்வும் அரசாங்கத்திடம் இல்லை.

நாட்டை நிர்வகிப்பதற்கு அரசாங்கத்திடம் தூர சிந்தனையோ முறையான வேலைத்திட்டமோ இல்லை. அதன் காரணமாகவே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அடுத்த வருடம் நடுப்பகுதியாகும்போது அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாமல் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடும் நிலையே இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment