கப்பலிலுள்ள உரத்தை பரிசோதனைக்காக மூன்றாம் தரப்புக்கு அனுப்ப இணங்கவில்லை : எமது நிலத்திற்கு உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படி சீனாவுடன் இணக்கம் - அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Thursday, October 28, 2021

கப்பலிலுள்ள உரத்தை பரிசோதனைக்காக மூன்றாம் தரப்புக்கு அனுப்ப இணங்கவில்லை : எமது நிலத்திற்கு உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படி சீனாவுடன் இணக்கம் - அமைச்சர் மஹிந்தானந்த

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சீன உரத்தை நாம் நிராகரித்துடன் அந்த கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம். அந்தக் கப்பலில் உள்ள உரத்தை பரிசோதனைக்காக நாம் மூன்றாம் தரப்புக்கு அனுப்புவதற்கு இணங்கவில்லை. மாறாக எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படியும், அவ்வாறு புதிதாக உற்பத்தி செய்யப்படும் உரத்தை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மூன்றாம் தரப்பினருக்கு கொடுப்பதற்குமே சீன தூதுவருடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

எமது நாட்டில் தற்போது நிலவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னணியில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்பவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்களைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரம் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள 'கொவிஜன மந்திரய' வில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் விளக்குகையில், "நாட்டின் பெரும்போக விவசாயம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் ஆரம்பமானது. இதன்படி டிசம்பர் மாதம் வரையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதுவரையில் எட்டு இலட்சம் ஹெக்டயர் நெற் பயிர்ச் செய்கை நிலம் காணப்படுவதுடன், ஆற‍ரை இலட்சம் விவசாயிகள் காணப்படுகின்றனர். இதில், நேற்றிரவின்போது (நேற்று முன்தினம்) 562 விவசாய சேவை மத்திய நிலையங்களின் தகவல்களின்படி 2 இலட்சத்து 4 ஆயிரம் ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை, அநுராதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர் தேவையில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். கடந்த 2 தினங்களாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சகல விவசாயிகளின் இணக்கத்துடன் இம்மாதம் 28 (இன்று) மற்றும் நவம்பர் 5 ஆம் திகதிகளில் நீரை விநியோகிப்பதற்கு தீர்மானித்தனர். அந்த மாவட்டங்களில் சகல விவசாயிகளும் நெற் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

மேலும், சிறு போக விவசாயத்துக்காகவும் நீர் விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகள் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். ஆகவே, அடுத்த மாதம் 10 ஆம், 15 ஆம் திகதிகளில் இந்த எட்டு இலட்ச ஹெக்டயர் விவசாய நிலப்பரப்பிலும் இந்நாட்டு விவசாய மக்கள் விவசாயத்தை மேற்கொள்வார்கள்.

விவசாயம் உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளுக்காக சேதனப் பச‍ளை உரம், உயிரியல் திரவ உரம், நைட்ரிஜன் உரம் மற்றும் பொட்டாசியம் உரம் ஆகிய நான்கு வகையான உர வகைகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு உரங்களை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், இரண்டு உரங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளோம்.

தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளை உரம் விவசாய மத்திய நிலையங்களுக்கு கிடைக்கச் செய்து வருகிறோம். இது விவசாயம் செய்யும் படிமுறைகளுக்கு அமைவாக அதனை வழங்கி வருகிறோம். உயிரியல் திரவ உரத்தையும் வழங்கி வருகிறோம்.

நைட்ரிஜன் உரத்தை வழங்கவுள்ளோம். இந்த நைட்ரிஜன் உரம் தாங்கிய கொள்கலன்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதியளவில் இந்தியாவிலிருந்து வந்தவுடன் அந்த உரத்தையும் தேவைக்கேற்க விவசாய மத்திய நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படும். கடைசியாக பயன்படுத்தப்படும் பொட்டாசியம் உரத்தை அடுத்த மாத ஆரம்பத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், பெரும்போக விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயப் பகுதிகளுக்கான அணைகளின் ஊடாக நீரை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் நீரைத் தர வேண்டாம் என விவசாயிகள் தெரிவித்திருந்தனர். ஆயினும் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளனர். உணவுப் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினை ஏற்படாதென்றும், நெற் பயிர்ச் செய்கைக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாதென்றும் நாம் நம்புகிறோம்.

உர இறக்குமதிக்காக சீன உர நிறுவனமொன்றுக்கு விலை மனுக் கோரலொன்றை வழங்கியிருந்தோம். ஆயினும், இந்த சீன நிறுவனத்தின் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பற்றீரியா இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்துக்கு அமைவாக இதனை இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் போனது. இதன் காரணமாக இதனை ‍ கொண்டு வருவதை நாம் நிறுத்தினோம்.

மேலும், அந்நிறுவனத்துக்கு பணத்தை வழங்குவதை நிறுத்துவதற்கு நீதிமன்ற உத்தவொன்றை பெற்றுக் கொண்டோம். அப்படி இல்லையென்றால், அந்த விலை மனுக் கோரலில் உள்ளபடி அந்த நிறுவனத்துக்கு பணம் அளிக்கப்பட வேண்டிவரும். ஆகவே, எமது இராஜாங்க அமைச்சர் சீன தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாடொன்றுக்கு வந்தோம். எமது நாட்டில் உரம் தொடர்பில் சட்டங்கள் உள்ளன. அந்த சட்ட திட்டங்களுக்கு அப்பால் சென்று செயற்பட முடியாது" என்றார்.

சீன கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம். எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து அதனை அனுப்பி வைக்குமாறு நாம் கேட்டுக் கொண்டுள்ளோம் என அமைச்சர் அளுத்கமகே தெரிவித்தார்.

"சீன உரத்தை நாம் நிராகரித்துடன் அந்த கப்பலை நாம் திருப்பி அனுப்பியுள்ளோம். அந்தக் கப்பலில் உள்ள உரத்தை பரிசோதனைக்காக நாம் மூன்றாம் தரப்புக்கு அனுப்புவதற்கு இணங்கவில்லை. மாறாக எமது நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு உகந்த உரத்தை புதிதாக உற்பத்தி செய்து தரும்படியும், அவ்வாறு புதிதாக உற்பத்தி செய்யப்படும் உரத்தை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மூன்றாம் தரப்பினருக்கு கொடுப்பதற்குமே சீன தூதுவருடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்பட்டது.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின்னணியில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்பவர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆதரவாளர்களைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment