மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும், பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும், அந்தளவிற்கு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை கைவிட வேண்டும், பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும், அந்தளவிற்கு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். ஒருவேளை தேர்தல் இடம்பெற்றால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும். அந்தளவிற்கு மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள். அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் வகையிலான மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு செலவழித்தால் நிலையான பயன் கிடைக்கும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைத் தேர்தல் முறைமையை முழுமையாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல் அவசியமா, இல்லையா என்பது குறித்து அரசாங்கம் முதலில் மக்களின் அபிப்ராயத்தை கோர வேண்டும்.எனவும் தெரிவித்தார்.

கொவிட் தாக்கத்தின் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கை செலவுகள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிடும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முயற்சிக்கிறது.

இந்திய வெளியுறவு செயலாளரது வருகையினை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதை அறிய முடிகியது. ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அனைத்து விடயங்களையும் தொடர்ந்து மறைத்து வைக்க முடியாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. மாகாண சபை வெள்ளை யானை போன்றது. வீண் செலவுகள் ஏற்படுகிறதே தவிர மக்களுக்கு பயன் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் இல்லாமல் மாகாண சபைகள் தற்போது ஆளுநர்களினாலும், அரச அதிகாரிகளினாலும் நிர்வகிக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு வழங்கினால் நிலையான பயன் கிடைக்கும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவேளை உணவைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத அவலநிலையில் உள்ளார்கள். இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி நிதியை செலவிடுவது வெறுக்கத்தக்கதொரு செயற்படாக கருத வேண்டும்.

ஜனநாயக கொள்கைக்கு மதிப்பளித்து மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளோம் என அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.மாகாண சபைத் தேர்தல் அவசியமா, இல்லையா என்பதை அரசாங்கம் முதலில் மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். நவீன தொழினுட்ப வசதிகள் ஊடாக மக்களின் அபிப்ராயத்தை கோரும் செயற்பாட்டை நாங்கள் முன்னெடுப்போம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். ஒரு வேளை தேர்தல் இடம்பெற்றால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும். அந்தளவிற்கு மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி 12 பௌத்த அமைப்புக்களின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள். அக்கடிதத்தினை அடிப்படையாக் கொண்டு ஜனாதிபதி செயற்படுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment