அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுற்றுநிருபம் : கர்ப்பிணிகள், விசேட தேவைகொண்டோரை அழைக்காதிருக்க ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுற்றுநிருபம் : கர்ப்பிணிகள், விசேட தேவைகொண்டோரை அழைக்காதிருக்க ஆலோசனை

(இராஜதுரை ஹஷான்)

மொத்த சனத் தொகையில் 50 சதவீதமானோரும், அரச சேவையாளர்களில் பெரும்பாலானோரும் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள். தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அரச சேவையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அவசியமாகும் என சுட்டிக்காட்டி அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான சுற்று நிருபத்தை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒரு சில அரச பொது சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் இன்று அதிகாலையுடன் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அரச சேவைகளை வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு மீளத் திறக்கப்படும் செயற்பாடுகளின் போது, அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியை அடையாளம் கண்டு, அவர்களை சேவைக்கு அழைக்க வேண்டும், அதற்கான அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாகனங்களை வைத்துள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்கு வரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த நியதி பொருந்தாது, அவர்கள் வழமை போன்று சேவைக்க சமுகமளிக்க முடியும்.

அவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளை தவிர்ந்த ஏனையோர் இணையவழி ஊடாக கடமையாற்ற வேண்டும். என்றும் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியில்லா நாட்களில் இணையவழி முறைமை ஊடாக சேவையாற்ற வேண்டும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளை கொண்டவர்களை சேவைக்கு அழைக்க வேண்டாம் எனவும் அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் எனும் பட்சத்தில் மாத்திரம் அவர்கள் சேவைக்கு சமுகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லையை வழங்க நிறுவனம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment