துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் பால்மா கொள்கலன்கள் அனைத்தையும் விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இறக்குமதியாளர்கள் எவ்வாறான கருத்துக்களை தெரிவித்தாலும் அதற்கான நிதியை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முறையாக முன்னெடுத்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் ஊடக சந்திப்பு சூம் தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்றதுடன் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பால்மா கொள்கலன்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்ததுடன் அதற்காக மத்திய வங்கி 50 மில்லியன் டொலரை விடுவித்திருந்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது. எவ்வாறெனினும் நேற்று வரை பால்மா இறக்குமதியாளர்கள் வங்கிகளிடமிருந்து தமக்கு தீர்வு கிடைக்கவில்லையென தெரிவித்திருந்தனர். அது தொடர்பில் மத்திய வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வியெழுப்பினார்.
அந்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், துறைமுகத்தில் தேங்கியுள்ள அனைத்து பால்மா கொள்கலன்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமக்கு கிடைத்துள்ள தகவலின்படி மேலும் 1.1 மில்லியன் அமெரிக்கன் டொலர் பெறுமதியான பால்மா உள்ளடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனையும் நேற்றையதினமே விடுவிப்பதற்கு மத்திய வங்கியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறக்குமதியாளர்கள் பால்மாவை ஓடர் செய்திருக்கா விட்டால் அல்லது ஓடர் செய்து இலங்கைக்கு வந்து அவற்றை சந்தைக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கா விட்டால் அது தொடர்பில் எம்மால் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment