இலங்கை ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள தசுன் ஷானக - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

இலங்கை ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள தசுன் ஷானக

கொரோனா தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை ஒருநாள் மற்றும் 20 க்கு 20 அணியின் தலைவர் தசுன் ஷானக இலங்கை ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதில் அவர், கிடைக்கக்கூடிய முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களை வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சின் அண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் இளம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவித்துள்ளது.

அவர்களுக்கு இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் உள்ளிட்ட போட்டிகளை நேரடியாக மைதானத்துக்கு வந்து பார்க்க அனுமதி வழங்கவும் இலங்கை கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் மருத்துவப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா வழங்கிய பேட்டியில், எமது இரசிகர்களை இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வதற்கு, உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளைப் பார்வையிட மைதானத்துக்கு 25 சதவீத இரசிகர்களை அனுமதிக்க முடியும்.

தற்போதைய நிலையில், நாட்டில் 54 சதவீத பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த சதவீதம் 70 தொடக்கம் 75 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படலாம். சுகாதார அமைச்சின் அனுமதியுடன் ரசிகர்களுக்கு மைதானத்துக்குச் சென்று போட்டிகளைப் பார்வையிட முடியும் என்றார்.

லங்கா பிரீமியர் லீக் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ள அனைத்து தொடர்களுக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ரசிகர்களை மாத்திரம் அனுமதிப்பது தொடர்பிலும், ஆராய்ந்து வருகின்றோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment