அரசாங்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை படுகுழியில் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

அரசாங்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை படுகுழியில் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது - சஜித் பிரேமதாஸ

(நா.தனுஜா)

இரசாயன உர இறக்குமதியை தடை செய்ததன் ஊடாக விவசாயிகளை மரணத்தின் விளிம்பை நோக்கி நகர்த்திச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையை அரசாங்கம் மிக வேகமாக நிர்மாணித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இருப்பினும் தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை முழுமையாகப் படுகுழியில் தள்ளும் வகையிலான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற 'கொவி ஹதகெஸ்ம' நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக அநுராதபுரம், கலாவௌ தொகுதியின் எப்பவெல கட்டியாவ என்னும் இடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேற்படி கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கட்டியாவ விவசாயக் குடியேற்றத்தின் ஆரம்பகர்த்தாவான முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய சஜித் பிரேமதாஸ, அதனைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் மற்றும் விவசாயிகளுடன் அவர்களது பிரச்சினைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அரசாங்கம் இரசாயன உரத்தின் இறக்குமதியைத் தடை செய்வதற்குத் தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானத்தினால் நாடு பாரிய பேரழிவிற்கு முகக்கொடுத்திருக்கின்றது. அவ்வாறிருந்தும் அரசாங்கம் அதனை உணர்ந்து கொள்ளாமல் எதேச்சதிகாரப் போக்கில் செயற்பட்டு வருகின்றது என்று சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் அண்மைக் காலத்தில் விவசாயிகள் கடன் சுமையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் பெருமளவானோர் கடன் தவணைப் பணத்தை உரிய காலப்பகுதியில் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ரோஹன பண்டார, சந்திரானி பண்டார, பீ.ஹரிசன், சந்திம கமகே, அனில் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment