தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர். பரிசோதனைகளின் தரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர். பரிசோதனைகளின் தரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

சுகாதார அமைச்சின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் தரம் தொடர்பில் சிக்கல்கள் நிலவும் நிலையில், அது தொடர்பில் பூரண விசாரணை ஒன்றினை முன்னெடுக்க சுகாதார அமைச்சுக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஐ.ஏ. ஷெல்டன் ஜயமான்ன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், அந்நிறுவனத்தின் தலைவர், அந்நிறுவனம் சார் அமைச்சின் செயலாளர், ஆசிரி சேர்ஜிகல் நிறுவனம், டேர்டன்ஸ் வைத்தியசாலை நிறுவனம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சின் செயலர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தான் ஒரு வர்த்தகர் என கூறும் மனுதாரர், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி வர்த்தக நோக்கத்துக்காக டுபாய் நோக்கி செல்ல தன் மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தான் டேர்டன்ஸ் வைத்தியசாலையில் பெற்றுக் கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை எடுத்துச் சென்றதாகவும், அதில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வெளிநாடு செல்வதற்கு முன்பதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலையத்தின் கீழ் வரும் ஆசிரி வைத்தியசாலை இரசாயன ஆய்வு கூடத்தில் தன்னை மீள பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிப்படுத்தப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் விமான நிலைய அதிகாரிகள் தனக்கு வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அதேதினம் டேர்டன்ஸ் வைத்தியசாலைக்கு சென்று மீள பி.சி.ஆர். பரிசோதனை செய்ததாகவும் அதில் தன்க்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்ததாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்கட்டியுள்ளார்.

இந்நிலையில், தான் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி, அதாவது வெளிநாடு செல்ல மறுக்கப்பட்ட மறுநாள், மீள ஆசிரி வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைச் செய்ததாகவும் அதில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் தரம் தொடர்பில் கேள்வி எழுவதாகவும், அதனால் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், சுகாதார அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளின் தரம் தொடர்பில் விசாரணை ஒன்றினை முன்னெடுக்க சுகாதார அமைச்சுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment