நண்பியின் ATM அட்டையில் இருந்து பணத்தை திருடிய பெண் கைது - News View

Breaking

Wednesday, October 20, 2021

நண்பியின் ATM அட்டையில் இருந்து பணத்தை திருடிய பெண் கைது

அநுராதபுரம் தம்புத்தேகமவில் தனது பெண் நண்பரின் ஏ.ரி.எம். அட்டையை திருடி தானியக்க இயந்திரத்தில் பணத்தை பெற்ற இளம் பெண் ஒருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புத்தேகமவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தம்புத்தேகம பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்காகச் சென்ற இளம் பெண்கள் இருவர் மிகவும் குறுகிய காலத்திற்குள் தமது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறும் வகையில் நெருக்கமான நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இன்று (20) நண்பி உணவு எடுப்பதற்காக வெளியே சென்ற போது, மற்றைய நண்பி வெளியே சென்ற நண்பியின் கைப் பையைத் திறந்து அவருடைய ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அவசர அவசரமாக அங்கிருந்து வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஏ.டி.எம் அட்டையை திருடிச் சென்ற நண்பி வங்கி தானியக்கி இயந்திரத்திற்குச் சென்று ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 36000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதுடன், தம்புத்தேகமவில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குச் சென்று இரண்டு தங்க மோதிரங்களை கொள்வனவு செய்வதற்காக முற்பணத்தை வழங்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது கைப் பை காணாமல் போயுள்ளமை பற்றி கைப் பையின் உரிமையளரான குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அந்த ஆடைத் தொழிற்சாலையின் சீ.சீ.ரி.வி காணொளிகளை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, கைப் பையின் உரிமையாளருடன் மிகவும் நெருக்கமான நண்பராக பழகி வந்த இளம் பெண்ணே குறித்த ஏ.ரி.எம். அட்டையை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (21) தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment