கணனி கொள்வனவில் இலங்கை போக்கு வரத்து சபையில் நிதி மோசடி - மேலதிகமாக 89 மில்லியன் ரூபா செலவு - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

கணனி கொள்வனவில் இலங்கை போக்கு வரத்து சபையில் நிதி மோசடி - மேலதிகமாக 89 மில்லியன் ரூபா செலவு

இலங்கை போக்கு வரத்து சபையில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின்போது மதிப்பிடப்பட்ட தொகையைவிட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.

இலங்கை போக்கு வரத்து சபை 2018ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை 15,290,000 ரூபாவுக்குக் கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்தபோது, இத்தொகையை விட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 113,303,750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதனால் 2018ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட 89,977,500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது.

இலங்கை போக்கு வரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு நேற்று (07) கூடியபோதே இந்த விடயம் வெளிப்பட்டது.

உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் இந்தத் தொகை செலவு செய்யப்பட்டமை குறித்து கோப் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

அத்துடன், அப்பாவி ஏழை மக்களுக்குச் சேவையாற்றுவதற்குள்ள இதுபோன்ற நிறுவனம் இவ்வாறு நிதியை செலவு செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். 

அத்துடன், 125 சொகுசு பஸ்களுக்கு கமரா மற்றும் ஜீ.பி.எஸ் கட்டமைப்பைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளைக் கொள்வனவு செய்ய தனியார் நிறுவனத்துடன், 33,628,840 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்தக் கருவிகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை இயங்கும் நிலையில் காணப்படவில்லையென்றும் கோப் குழுவில் தெரியவந்தது. 

விசேடமாக இந்த பஸ்களில் பணியாற்றுபவர்கள் வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் முடிவடைந்ததும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

அத்துடன், அந்த நிறுவனத்துடனான சேவைக்காலம் முடிவடையாவிட்டால் இயங்க முடியாத நிலையில் உள்ள உபகரணங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.

No comments:

Post a Comment