வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் 7 மணி நேரம் விசாரணை : அவசியம் ஏற்படின் மீள அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் 7 மணி நேரம் விசாரணை : அவசியம் ஏற்படின் மீள அழைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் சுமார் ஏழு மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நேற்று 9 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகிய வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் பிற்பகல் 3.15 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் விஷேட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படின் மீள விசாரணைக்கு அழைப்பதாக கூறி வைத்தியர் ஜயருவன் பண்டார விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித்த நடத்திய நேர்காணலில், வைத்தியர் ஜயருவன் பண்டார வெளிப்படுத்திய விடயங்களை மையப்படுத்தி, தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக, விடயங்களை அறிந்துக்கொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த விடயம் தொடர்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்து உற்பத்திக் கூட்டுத் தாபனங்களின் தலைவர்கள் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் ஜயருவன் பண்டார விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

வைத்தியர் ஜயருவன் பண்டார, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதன் முதலாக சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். எனினும் அவர் அப்போது அங்கு ஆஜராகவில்லை.

கொவிட் தொற்றிலிருந்து மீண்ட பின்னர், தற்போது வைத்திய ஆலோசனை பிரகாரம் கொவிட் நிலைமைக்கு பின்னரான சிற் சில ஆரோக்கியமற்ற நிலைமைகளை கருத்திற் கொண்டு ஓய்வில் உள்ளதாக சட்டத்தரணிகள் சி.ஐ.டி.க்கு அப்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் 14 நாட்களின் பின்னர் சி.ஐ.டி. எதிர்ப்பார்க்கும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்கு மூலம் வழங்க தயார் என இதன்போது எழுத்து மூலம் சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே, அவருக்கு நேற்று (9) சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு வழங்கிய செவ்வியில், வைத்தியர் ஜயருவன் பண்டார, அரசாங்கம் கொவிட் நிலைமையை மையப்படுத்தி எவ்வாறான மாபியாக்களை உருவாக்கியுள்ளது என்பது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அத்துடன் இந்நிலைமையை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும், மக்கள் சுரண்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்ததுடன், அதனுடன் தொடர்புடைய பல்வேறு நபர்களின் பெயர்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதனைவிட, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ' ஈ.என்.எம்.ஆர்.ஏ.' தகவல் கட்டமைப்பு அதிலிருந்த தகவல்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலும் பல விடயங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே அவர் சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

தாபன விதிக் கோவையை மீறி செயற்பட்டதாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment