(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னரே நாடு படுமோசமான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அதனால் தற்போது ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ளாது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான உபாயமார்க்கங்களையே தேட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச நிதி கட்டமைப்புக்கு சொந்தமான நான்கு பங்குகள் உள்னன. அரச வருமானம், அரச செலவுகள், அரச வருமான பற்றாக்குறை, அரச வருமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அசை கடன் முறையென நான்கு கட்டமைப்புகளை அரச நிதி கட்டமைப்பு கொண்டுள்ளது.
கடந்த ஒவ்வொரு தசாப்தமும் நிலைமையானது உக்கிரமடைந்தே வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதார அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்நிலைமை தொடர்கிறது. இதன் பின்னரான ஒவ்வொரு தசாப்தமும் அரச வருமானம் குறைந்ததுடன், அரச செலவீனங்கள் அதிகரித்து வந்துள்ளன. மீண்டெழும் செலவீனங்களுக்கு போதுமான அரச வருமானம் கிடைப்பதில்லை. யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
2020ஆம் ஆண்டில் அரச வரி வருமானம் 1216 பில்லியன்களாகும். ஆனால், அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்துக்கு 1050 பில்லியன் செலவாகியுள்ளது. முழு நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகள் மூலம் பெறப்படும் வரி வருமானத்தில் 86 சதவீதத்தை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏனைய அரச செலவுகளை எவ்வாறு சமாளிப்பது.
கடந்த அரசாங்க காலத்தில் 6 டிரில்லியன் கடனை பெற்றுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 10 வருடம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 5 டிரில்லியன் கடனைத்தான் பெற்றிருந்தார். ஆனால், உலக பொருளாதார நெருக்கடி, யுத்தம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே அவர் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசென்றார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உலக சந்தையில் கனிய எண்ணை விலை குறைந்திருந்தது, தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் பாரிய அளவில் கடனை பெற்று நாட்டை மோசமான நிலைக்கு தள்ளினர். பெற்ற கடன்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் செய்திருப்பதை காணக்கூடியதாக இல்லை என்றார்.
No comments:
Post a Comment