உரம் இறக்குமதி செய்ய தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டு 29 கோடியே 32 இலட்சம் ரூபா பரிமாற்றம் : விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

உரம் இறக்குமதி செய்ய தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டு 29 கோடியே 32 இலட்சம் ரூபா பரிமாற்றம் : விஜித ஹேரத்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

இந்தியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்ய இந்திய நிறுவனமொன்றுக்கு பணம் வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு 29 கோடியே 32 இலட்சம் ரூபா பரிமாற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் வெளிப்படுத்தினார்.

இவ்வாறு பரிமாற்றப்பட்டுள்ள பணத்தில் வெறுமனே 9 கோடியே 20 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை,ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியகுழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் நிதி முகாமைத்துவம் பாராளுமன்றதின் ஊடாகவே இடம்பெற வேண்டும். உர பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் சில தினங்களுக்கு முன்னர் நனோ நைட்ரிஜன் இலங்கைக்கு இறக்குமதி செய்தனர். இதற்காக இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இலங்கையில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது, ஆனால் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பதை பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மக்கள் வங்கியின் ஊடாக நிதி விடுவிப்பு ஒன்றினை கோரியுள்ளனர், இலங்கை உர நிறுவனம் எதுவும் இல்லாது பி.பி ஜெயசுந்தரவின் தலையிட்டில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்து புதிய நிறுவனம் ஒன்றுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

1.257 மில்லியன் டொலர்கள் இவ்வாறு பரிமாற்றப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவில் 29 கோடியே 32 இலட்சம் ரூபாவாகும். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எவ்வாறு மக்கள் வங்கியினால் பணம் பரிமாற்ற முடியும்.

கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கணக்கிற்கு இந்த தொகை மக்கள் வங்கியால் அனுப்பப்பட்டுள்ளது, இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து உரம் கொண்டுவர குறித்த இந்திய நிறுவனத்திற்கு 3 இலட்சம் டொலர்களை வழங்கியுள்ளனர். மேலும் 50 ஆயிரம் டொலர்களை மேலதிக கட்டணமாகவும், அதற்கும் மேலதிகமாக 37ஆயிரம் டொலர்களையும் வழங்கியுள்ளார்.

ஆகவே மொத்தமாக 29 கோடியே 32இலட்சம் ரூபாவில் 9 கோடியே 20 இலட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 20 கோடியே 12 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா இன்னமும் இந்த கணக்கில் உள்ளது. டொலர்களில் வழங்கப்பட்ட பணம் ஏன் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்ய டொலர்களில் பணம் செலுத்துவதற்கு இலங்கை ரூபாவிற்கு ஏன் மாற்றப்பட்டது. இது குறித்து உடனடியாக ஆராய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment