(இராஜதுரை ஹஷான்)
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பயணிகள் புகையிரத சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட இத்தீர்மானங்கள் சிலவேளை மாற்றமடையலாம் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
இது குறித்து புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மேலும் குறிப்பிடுகையில், மாகாண எல்லைகளுக்குட்பட்ட பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவை நாளை மறுதினமும், மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் புகையிரத சேவை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும்.
புகையிரத பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் எதிர்வரும் வாரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும். இத்தீர்மானம் சிலவேளை மாற்றம் பெறலாம்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இம்மாதம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டது. இருப்பினும் பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு கொவிட்-19 வைரஸ் தடுப்பு மையம் அனுமதி வழங்கவில்லை.
தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்று பரவல் குறைவடைந்துள்ள நிலையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பயணிகள் புகையிரத போக்கு வரத்து சேவையை ஆரம்பிக்க கொவிட் தடுப்பு செயலணி அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய நாளைமறுதினம் மாகாணத்திற்குள் மாத்திரம் புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத பருவ கால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும்.
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகையிரத சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட இத்தீர்மானங்கள் சிலவேளை மாற்றமடையலாம் என்றார்
No comments:
Post a Comment