கடந்த ஆண்டில் உயிர்களை காவு கொண்ட காட்டுத் தீயை வேண்டுமென்று ஆரம்பித்ததாக குற்றங்காணப்பட்ட 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் மேலும் பதினொரு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு ஐந்து சிறார்களுக்கு 10 தொடக்கம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளாக இவர்கள் விபரிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் நீடிக்கும் சிரியாவின் மலைப்பாங்கான துறைமுக பிராந்தியங்களில் தீ வைப்புகளில் ஈடுபட்டதை இவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். 2020 ஒக்டோபரில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீயில் மூவர் கொல்லப்பட்டனர்.
இதன்போது லடக்கியா, டார்டூஸ், ஹோம்ஸ் மற்றும் ஹமா மாகாணங்களில் 187 காட்டுத் தீ சம்பங்கள் பதிவானதோடு 280 சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் 13,000 ஹெக்டெயர் விவசாய நிலங்கள் மற்றும் 11,000 ஹெக்டெயர் காட்டு நிலங்கள் அழிவடைந்ததாகவும் கூறப்படுகிறது எனினும் காலநிலை மாற்றங்களால் கிழக்கு மத்தியதரை பிராந்தியத்தில் காட்டுத் தீ வருடாந்த நிகழ்வாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசினால் ஆயிரக்கணக்கானவர்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment