ஒக்டோபர் 25 இல் சமூகமளிக்க தயார் : கடமைக்கு வருவது பயத்தில் அல்ல : தொழிற்சங்க நடவடிக்கைக்கு இன்று 99ஆவது நாள் : சம்பள கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க முன்னணி - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

ஒக்டோபர் 25 இல் சமூகமளிக்க தயார் : கடமைக்கு வருவது பயத்தில் அல்ல : தொழிற்சங்க நடவடிக்கைக்கு இன்று 99ஆவது நாள் : சம்பள கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க முன்னணி

200 இற்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒக்டோபர் 21 இல் அல்லாது, ஒக்டோபர் 25 முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, ஒக்டோபர் 21 (வியாழக்கிழமை) மற்றும் ஒக்டோபர் 22 (வெள்ளிக்கிழமை) திகதிகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லையென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒக்டோபர் 25ஆம் திகதி பாடசாலைகளுக்கு தாங்கள் சமூகமளித்த போதிலும், தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாங்கள் அரசாங்கத்திற்கு பயந்து குறித்த முடிவை எடுக்கவில்லையெனவும், மாணவர்களின் நலன் கருதி, அரசாங்கம் தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் பொதுப் பரீட்சைகள் தொடர்பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஒன்றரை வருடமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், தாங்கள் கடந்த 3 மாதங்களாகவே இத்தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இன்று அதற்கு 99ஆவது நாள் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

அத்துடன் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான இம்முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக, தொழிற்சங்கங்கள் இதன்போது சுட்டிக்காட்டின.

No comments:

Post a Comment