ஓமான் - இலங்கை இரண்டாவது ரி20 போட்டி இன்று - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

ஓமான் - இலங்கை இரண்டாவது ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் ஓமான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் ரி 20 போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. 

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. 

இலங்கை - ஓமான் அணிகள் இடையிலான ரி 20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று சனிக்கிழமை (09) நடைபெறுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணி ரி 20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் ஓமான் அணியுடன் ஆட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ரி 20 போட்டி (07) மஸ்கட் நகரில் தொடங்கியது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணியின் தலைவர் ஷீசான் மக்சூத் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கினார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி கமிந்து மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க நுவான் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்களும் இலங்கை குழாத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் நாணயச் சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் 5ஆவது ஓவரில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இதில் இலங்கை அணியின் முன்வரிசையில் களமிறங்கிய தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் ஓட்டமின்றியும், பெதும் நிஸ்ஸங்க 8 ஓட்டங்களுடனும் தமது விக்கெட்டுக்களைப் பறிகொடுத்திருந்தனர்.

இலங்கை அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ புதிய துடுப்பாட்டவீரராக வந்த பானுக ராஜபக்ஷ மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இரு வீரர்களுடனும் இணைந்து அணியினை கட்டியெழுப்பினார்.

இதில் குறிப்பாக அணித்தலைவர் தசுன் ஷானக்கவுடன் இலங்கை அணியின் 6ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் மேற்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ போட்டியின் இறுதி 56 பந்துகளில் அரைச்சதத்துடன் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார்.

பின்னர் இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்ட உதவியோடு இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் 59 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவிஷ்க பெர்னாண்டோ 83 ஓட்டங்கள் பெற, அணித்தலைவர் தசுன் ஷானக்க அதிரடியான அரைச்சதத்துடன் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தார். 

ஓமான் அணியின் பந்துவீச்சில் பய்யாஸ் பட் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, கலிமுல்லா மற்றும் கவார் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் கிரிக்கெட் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது. 

ஓமான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டியிருந்த நஸிம் குஷி 22 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், சாமிக்க கருணாரட்ன மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்தும் தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

No comments:

Post a Comment