20ஆவது திருத்தத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், அதனால் விலக்கிக் கொள்ளும் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரப் போவதில்லை - ராேஹித்த அபேகுணவர்தன - News View

Breaking

Wednesday, October 6, 2021

20ஆவது திருத்தத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர், அதனால் விலக்கிக் கொள்ளும் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரப் போவதில்லை - ராேஹித்த அபேகுணவர்தன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மக்களின் விருப்பமின்றி 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததால்தான் கடந்த அரசாங்கம் அடுத்தடுத்து மூன்று தேர்தல்களின் தோல்வியை சந்தித்தது. 20ஆவது திருத்தச் சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் விலக்கிக் கொள்ளும் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரப் போவதில்லை என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள் கீழ் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். அதற்கு முன்னர் 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாம் சில கேள்விகளை அவரிடம் முன்வைக்க விரும்புகிறோம்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்காகத்தான் 19ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாக கூறியது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மக்களால் புரிந்துகொள்ள முடியாது போயுள்ளதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியால் புரிந்துகொள்ள முடியாது போயுள்ளதா எனத் தெரியவில்லை. 19 ஐ கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 90 சதவீதமான உள்ளூராட்சி மன்றங்களை நாமே கைப்பற்றினோம். ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர். 19 ஐ ஏற்றுக் கொள்ளாமையால்தான் இந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. பாராளுமன்றத் தேர்தலும் 19 ஐ அடிப்படையாகக் கொண்டுதான் இடம்பெற்றது.

ஆகவே, நாங்கள் விலக்கிக் கொள்ளும் சட்டங்களை கொண்டு வரவில்லை. அவ்வாறான சட்டங்களை கொண்டுவரப் போவதும் இல்லை. அதனால்தான் மக்கள் எமக்கு வாக்களித்துள்ளனர். நாம் சவால்களுக்கு அச்சமடையும் அரசாங்கம் அல்ல என்றார்.

No comments:

Post a Comment