நுவரெலியா பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் - News View

Breaking

Monday, October 11, 2021

நுவரெலியா பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

நுவரெலியா பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டம்  நேற்று (11) திங்கட்கிழமை  தலைவர் உட்பட 20 உறுப்பினர்களின் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்ட அமர்வு சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் சபையின் நானுஓயா பிரதான காரியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (11) திங்கட்கிழமை 10.58 மணியலவில் ஆரம்பமானது. 

இதன்போது இராகலையில் கடந்த 08ஆம் திகதி தீ விபத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

சபையில்  உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ள 23 பேரில் இவ் வரவு செலவு கூட்ட அமர்வுக்கு 21 உறுப்பினர்கள் சமூகளித்திருந்தனர். 

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான எஸ்.நித்தியகலா மற்றும் ஆர்.தமிழ்செல்வன் ஆகிய இரு உறுப்பினர்கள் தமது விடுமுறைக்கான கடிதங்களை சபை செயலாளர் சுனில் வட்டலியத்தவுக்கு கடித மூலம் அனுப்பியிருந்த நிலையில் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

அதேவேளை சபை தவிசாளர் வேலு யோகராஜ் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு காலை 11.12 மணிக்கு சமர்ப்பித்தார்.  

இதன்போது தவிசாளரால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறுசிறு திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டு சபை உறுப்பினர் திட்டத்திற்கு ஆதரவாக வாழ்த்துக்களையும் தமது ஆதரவினையும் தனித்தனியாக தெரிவித்தனர். 

இந்த நிலையில் சபைக்கு சமூகமளித்திருந்த 21 உறுப்பினர்களில் எதிர்கட்சியான ஐ.தே.க உறுப்பினர் சி.பி.எம்.உயங்கொட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த போதும் ஆளும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தலைவர் உட்பட 20 உறுப்பினர்களின் மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கேசரி 

No comments:

Post a Comment