2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு - சுசில் பிரேமஜயந்த - News View

Breaking

Wednesday, October 6, 2021

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு - சுசில் பிரேமஜயந்த

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சரவை உப குழுவின் சாதகமான சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படுமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2018ஆம் ஆண்டு அமைச்சரவை உப குழுவின் சம்பளமுறை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் சுபோதினி குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் சம்பளம் மற்றும் சேவையாளர்கள் குழு தமது சிபாரிசுகளை இன்னமும் வழங்கவில்லை. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க முடியாது. அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவேண்டும்.

அத்துடன் கொவிட் நெருக்கடியால் நிதி தொடர்பிலான பிரச்சினைகள் உள்ளன. அதேபோன்று, ஏனைய அரச சேவைகளுக்கு பாதிப்பில்லாது இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற தேவை அனைத்து அரசாங்கங்களுக்கும் இருந்தமையால்தான் கடந்த 26 வருடங்களாக இந்த பிரச்சினை தொடர்கிறது.

அமைச்சரவை உப குழுவின் சாதகமான சிபாரிசுகளின் பிரகாரம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment