13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க தமிழர் தரப்புக்கள் ஐக்கிய அணியாக ஒன்றுபட வேண்டும் என்கிறார் தயான் ஜயதிலக - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க தமிழர் தரப்புக்கள் ஐக்கிய அணியாக ஒன்றுபட வேண்டும் என்கிறார் தயான் ஜயதிலக

இலங்கை, இந்திய ஒப்பந்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்காக தமிழர் தரப்புக்கள் ஐக்கிய அணியொன்றை அமைத்து ஒன்றுபட வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையான நடைமுறைப்படுத்துவதே சாத்தியமானதொரு விடயமாக இருக்கின்றதோடு இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷிரிங்லாவின் இலங்கை விஜயத்தின் போதும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்தபோது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக இந்தியாவுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதாகவும் அறிவித்திருந்தார்.

இருப்பினும், அவரைச் சூழவிருந்த பருந்துகள் அவ்விதமான செயற்பட்டை முன்னெடுப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பத்தினை அளிக்கவில்லை. இவ்விதமான நிலையில் புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக பேசப்பட்டு சில காலம் வீணடிக்கப்பட்டது.

தற்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக உள்ளார். இவருடைய காலத்தில் இலங்கை சீனாவின் பக்கம் அதிகமாக சாய்ந்து விட்டது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வித நிலையில் அவருடன் சந்திப்பை நடத்திய இந்திய வெளிவிவகார செயலாளர் 13ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது பற்றி பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்.

அதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலத்தினையும், பலவீனங்களையும் புரிந்து கொண்டு அதன்படி செயற்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றைவரி கருத்து மிகவும் ஆழமானது. அவர் இவ்விதமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் 2009 இற்கு பின்னர் ஜெனிவா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தளங்களில் இந்தியாவின் செயற்பாடுகளை கோட்டாபய புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இலங்கைக்கு தூணாக இருக்கும் இந்தியாவை புறமொதுக்கி விட முடியாது.

எனவே, கோட்டாபயவும் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கு அப்பால் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும். இது பிராந்திய அரசியலுக்கும் நன்மையானது.

அதேநேரம், இந்த விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் ஏகோபித்த நிலைப்பாட்டிற்கு வர வேண்டியுள்ளன. தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச் சட்டமே சாத்தியமானது என்பதை இந்தியா வெளிப்படுத்தி விட்டது. அதனை முழுமையான நடைமுறைப்படுத்துவதே முதற்கட்ட வெற்றியாக இருக்கும்.

இதற்காக தமிழ் தரப்புக்கள் தமக்குள் காணப்படும் அரசியல் நிலைமைகளை விடுத்து ஐக்கிய அணியாக பொதுத்தளமொன்றுக்கு வர வேண்டும். அதன் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் அதுவே ஒரே தெரிவாக உள்ளது. அதற்கு அப்பால் வேறொன்றும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment