இலங்கைக்கு 100 மில்லியன் யூரோக்களை விசேட சலுகை கடன் முறைமையின் கீழ் வழங்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

இலங்கைக்கு 100 மில்லியன் யூரோக்களை விசேட சலுகை கடன் முறைமையின் கீழ் வழங்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஊடாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் யூரோக்களை விசேட சலுகை கடன் முறைமையின் கீழ் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் நேற்றுமுன்தினம் (29) இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக ஒரு மில்லியன் தடுப்பூசி தொகை தற்போது கையிருப்பில் உள்ளதாகவும், வாராந்தம் 4 இலட்சம் தடுப்பூசி தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சைபி உள்ளிட்ட குழுவினர் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்த போதே மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின் சுகாதார கட்டமைப்பிற்காக 2 மில்லியன் யூரோ பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஒட்சிசன் அளவுமானிகள், ஈ.சி.ஜி. இயந்திரம் , ஒட்சிசன் சிலிண்டர்கள் , வைத்தியசாலைகளுக்கான கட்டில்கள் என்பன உள்ளடங்குகின்றன.

ஐரோப்பிய முதலீட்டு வங்கி ஊடாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 100 மில்லியன் யூரோக்களை விசேட சலுகை கடன் முறைமையின் கீழ் வழங்குவது தொடர்பில் இதன் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கருத்து வெளியிட்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர், நாட்டின் முழு சனத் தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கலில் உலகில் முதலாம் இடத்திலுள்ள இலங்கையில் 20 - 29 வயதுக்கு இடைப்பட்ட சனத் தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு 15 - 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 32 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் முன்னிலை ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக ஒரு மில்லியன் தடுப்பூசி தொகை காணப்படுகிறது. வாராந்தம் 4 இலட்சம் தடுப்பூசி தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

வெவ்வேறு மத மற்றும் சம்பிரதாய நிலைப்பாடுகளின் காரணமாக இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களை இனங்கண்டு அவ்வாறானவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

தடுப்பூசி வழங்கல் மற்றும் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக இலங்கை அரசாங்கம் அதிகபட்ச வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அவர்களுடைய திருமண வைபவங்களை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. அதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.

தடுப்பூசி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை கட்டாயப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இளைஞர்களுக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைப், 'தற்போது ஐரோப்பாவில் போக்கு வரத்துகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டுள்ளன. அத்தோடு தடுப்பூசி அட்டை அங்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை சோதிக்கப்படும்.' என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment