அமைச்சர் டக்ளஸ் - செந்திலிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

அமைச்சர் டக்ளஸ் - செந்திலிடம் சுமந்திரன் விடுத்துள்ள விசேட கோரிக்கை

ஆர்.ராம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குள் தமிழர்களை உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவும், செந்தில் தொண்டமானும் துணைபோகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர்களின் அடிப்படைகளையும், நாட்டின் பல்லினத் தன்மையையும் அடியோடு அழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ள ஞானசாரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் தமிழ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதன் செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்வதன் மூலம் அமைச்சர் டக்ளஸின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாடு காணமலாக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழர் கூட்டணியில் தந்தை செல்வா உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டதோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களாகவும் இருந்து ஒட்டு மொத்த தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். அவர் வழி வந்த செந்தில் தொண்டமான் தமிழர்களின் தனித்துவத்தினை அழிக்கும் செயற்பாட்டிற்கு துணை நிற்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே சட்டம் எண்ணக்குருவை முன்னெடுப்பதற்காக செயலணியில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்படாமையால் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதனையடுத்து ஆளும் தரப்பின் கூட்டத்தில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி இணங்கியதாக அமைச்சர் டக்ளஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உறுப்பினர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளுக்கு துணையாகவும் அவர்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்த நாட்டின் பல்லினத் தன்மையை அடியோடு அழித்து சிங்கள, பௌத்த தேசமாக மாற்றுவதற்கே ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளார். இதில் தமிழின பற்றுள்ள, சுய கௌரவமுள்ள எந்தவொரு தமிழனும் பங்கேற்கப்போவதில்லை என்பது நிச்சயமானது.

அவ்விதமாக இருக்கையில், அமைச்சர் டக்ளஸ், செந்தில் தொண்டமானும் செயலணியை ஏற்று அதில் தமிழ் உறுப்பினர்களை உள்ளீர்ப்பதற்கு துணையான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் ஏற்படவுள்ள பாரதூரமான விளைவுகளை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிமகளுக்கான விவாக, விவகரத்துச் சட்டம், தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முக்குவர் சட்டம் என்பன இந்த நாட்டில் காணப்படுகின்றன. அவை இந்த நாட்டின் பல்லினத்தினை வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு இருக்கையில் அச்சட்டங்கள் அகற்றப்பட்டு ஒரே சட்டம் இயற்றப்பட்டால் நாட்டின் பல்லினத்தன்மை அடியோடு காணாமலாக்கப்படும்.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி தலைமையிலான மத்திய அரசாங்கதிடமே அதிகாரங்கள் குவிந்து காணப்படும். இதனால், மாகாண சபைகள் செயலற்றவையாக்கப்படுவதோடு, அவற்றின் சட்டமியற்றும் அதிகாரங்களும் கேள்விக்குறியாகி விடும். மத்தியில் இருந்தே அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நிலைமையே காணப்படுமே தவிர அதிகரப்பகிர்வு சம்பந்தமான பேச்சே இருப்பதற்கு வாய்ப்பற்ற நிலை உருவாகிவிடும்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை உடைய அமைச்சர் டக்ளஸ் இதற்கு துணைபோகப் போகின்றாரா என்பது முக்கியமான விடயமாகின்றது.

அதேபோன்று, நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்காகவும் அவர்களின் அடையாளங்களுக்காகவும் குரல் கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர் வழி வந்த செந்தில் தொண்டமான் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்கும் செயற்பாடொன்று துணைபோவது வரலாற்றுத் தவறாகி விடும்.

ஆகவே அமைச்சர் டகள்ஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் செயலணியில் தமிழ் உறுப்பினர்களை உள்ளீர்ப்பதற்கு துணைபோவதை விடவும் அச்செயலணியை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment