இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 31, 2021

இலங்கையை பௌத்த குடியரசாக பிரகடனம் செய்வதற்கு பிரயத்தனம் : இந்திய உயர்ஸ்தானிகரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டு

ஆர்.ராம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை ‘இலங்கை பௌத்த குடியரசாக’ பிரகடனம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பிரயத்தனம் செய்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் பாணுபிரகாஷ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவருடைய கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழு புதிய அரசியலமைப்புக்கான வரைவொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு தனது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அவ்வாறானதொரு நிலையில்தான் தற்போது, விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்று சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம், தம்மிடத்திலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்டதாக உயர்ஸ்தானிகரும் பதிலளித்துள்ளார். அத்துடன் அந்த விடயத்தில் தாமும் கரிசனையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவை அமுலாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி குறித்த நிலைப்பாடு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த, கூட்டமைப்பின் தலைவர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசை, இலங்கை பௌத்த குடியரசாக மாற்றுவதற்காக பிரயனத்தம் செய்யப்படுகின்றது. அதற்காகவே இவ்விதமான செயலணிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும் குறித்த செயலணியில் தமிழர்கள் யாரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. ஆகவே இதில் காணப்படுகின்ற உள்நோக்கம் தெளிவாக தெரிக்கின்றது என்று பதிலளித்துள்ளார்.

அதனையடுத்து, இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் சம்பந்தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் காணப்பட்ட நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தினார்.

சம்பந்தனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட உயர்ஸ்தானிகர், தற்போது இழுவை மடி பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு அம்முறைமைகளை உள்ளீர்க்கச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதிலளித்துள்ளார்.

இதேவேளை,13ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாகவும் உயர்ஸ்தானிகரிடத்தில் சம்பந்தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அவ்விடயம் சம்பந்தமாக தொடர்ச்சியாக இந்தியா கரிசனை செய்து வருகின்றமையையும் நினைவுபடுத்தினார்.

மேலும், இந்த விடயத்தில் பகிரங்கமான கருத்தாடல்கள் செயற்பாடுகள் பொருத்தமற்றதென்பதையும் அவ்விதமான நிலைமைகள் தெற்கில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment