ஜப்பானின் 100 ஆவது பிரதமராக பதவியேற்றார் புமியோ கிஷிடா - News View

Breaking

Monday, October 4, 2021

ஜப்பானின் 100 ஆவது பிரதமராக பதவியேற்றார் புமியோ கிஷிடா

ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான புமியோ கிஷிடா அந்நாட்டு பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ஜப்பான் பிரதமர் யொஷிஹிடெ சுகா பதவி விலகியதைத் தொடர்ந்து, ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக்குள் இடம்பெற்ற புதிய பிரதமரை தெரிவு செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற அவர் இன்று பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அதற்கமைய, 64 வயதான புமியோ கிஷிடா ஜப்பானின் 100ஆவது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, சுவவீனம் காரணமாக கடந்த வருடம் செப்டெம்பரில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதை தொடர்ந்து ஷின்ஜோ அபேயின் அரசில் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்து வந்த யொஷிஹிடே சுகா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

ஜப்பான் பிரதமர் யொஷிஹிடெ சுகா, கொரோனாவை கையாண்ட விதத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதன் காரணமாக, தனது ஒரு ஆண்டு பொறுப்புக்கு பின்னர் அவர் பதவி விலகினார்.

இந்த நிலையில் ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்யும் தேர்தலை கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி நடாத்தியிருந்தது. 

இதில் தாரோ கோனோ, புமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான புமியோ கிஷிடா வெற்றிபெற்றிருந்தார்.

No comments:

Post a Comment