குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஊடகவியலாளர்களை வரவழைத்த சம்பவம் தொடர்பில் வருந்துவதாக, பொலிஸ்மா அதிபர் (IGP) தெரிவித்துள்ளார்.
வெள்ளைப்பூடு விவகாரம் தொடர்பில், இடம்பெறும் விசாரணைகளுக்கமைய அது தொடர்பான செய்திகளை பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், அதனை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் அறிவித்திருந்த நிலையில், அதனை அவ்வாறே மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை நடாத்துமாறு தெரிவித்திருந்தார்.
குறித்த விடயத்தின் அடிப்படையில், பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட குறித்த அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது சிஐடியின் வழக்கமான நடைமுறை அல்ல என்றும், அத்திணைக்களம் ஊடகங்களிடம் உதவி கோரும் போதெல்லாம், ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளதால், ஊடகவியலாளர்கள் சிஐடிக்கு வரவழைக்கப்படுவதில்லை என்றும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் சிரமத்திற்குள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் தமது கவலையை தெரிவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிஐடியின் தொழில்துறை சார்ந்த நடவடிக்கைக்கு கழங்கம் ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்ற மற்றும் அலட்சியமாக நடந்து கொண்ட திணைக்களத்தின் குறித்த அதிகாரிகள் தொடர்பில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை பொலிஸார் எப்போதும் மதிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment