நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலிக்கும் இஸ்ரேல் - பூஸ்டருக்கான வயது வரம்பையும் குறைத்தது - News View

Breaking

Monday, September 6, 2021

நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலிக்கும் இஸ்ரேல் - பூஸ்டருக்கான வயது வரம்பையும் குறைத்தது

உலக அளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலும் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. இருப்பினும் வைரஸ் கிருமியானது தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், 3 வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த முடிவெடுத்துள்ளன.

உலக அளவில் இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இதுவரை இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தீவிர ஊரடங்குகளைத் தவிர்க்கவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே தனது மக்கள் தொகையில் அதிக சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போட்ட இஸ்ரேல் நாட்டிலும் கூட இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் மத்தியிலும்கூட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்காக, இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நாடு ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க வயது வரம்பைக் குறைத்துள்ளது.

பைசர் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோசாக வழங்க முடிவு செய்த இஸ்ரேல், முதலில் வயதானோருக்கு தடுப்பூசியைச் செலுத்தியது. படிப்படியாக வயது வரம்பைக் குறைத்து வந்த அரசு, தற்போது 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாராக இருப்பினும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேலும் கொரோனாவால் பாதிப்படையாமல் இருக்க 4 வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்த பரிசீலித்து வருவதாக அந்நாட்டு மருத்துவத்துறை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்தடுத்த அலைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 வது டோஸ் தடுப்பூசியை செலுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்நாட்டில் 25 லட்சம் பேர் தங்கள் 3 வது டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment