மத்திய வங்கியின் நிதிச் சபை செயலாளர் அஜித் நிவாட் கப்ராலினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Sunday, September 19, 2021

மத்திய வங்கியின் நிதிச் சபை செயலாளர் அஜித் நிவாட் கப்ராலினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

எம்.மனோசித்ரா

மத்திய வங்கியின் நிதிச் சபை செயலாளர் கே.எம்.ஏ.என். தவுலகவை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கி ஆளுநரால் தற்போது பதவி நீக்கப்பட்டுள்ள நிதிச் சபை செயலாளர் தடயவியல் கணக்காய்வு தொடர்பில் மத்திய வங்கியின் பிரதான அதிகாரியாக செயற்பட்டவராவார். பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு விசாரணைகளின் அறிக்கைகளும் இவராலேயே பேணப்பட்டு வந்தன.

2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத காலப்பகுதியில் கூட இது தொடர்பில் சாட்சியளிப்பதற்கு அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட போது, அவர் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் தன்னால் வருகை தர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை மனதில் கொண்டுதான் இந்த பதவி நீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுகிறது.

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இவ்விடயங்களில் எந்தளவிற்கு அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன என்பதும் தெளிவாகிறது. எனவே கே.எம்.ஏ.என். தவுலக பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment