நாட்டின் எதிர்காலம் பாரிய அச்சுறுத்தலுக்குள் என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல - News View

Breaking

Sunday, September 12, 2021

நாட்டின் எதிர்காலம் பாரிய அச்சுறுத்தலுக்குள் என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

எம்.மனோசித்ரா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புக்களே அதிகமுள்ளன. இது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் அத்தோடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்வதேசத்தை நாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் எவ்விதத்திலும் தவறாகாது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் அண்மைக் காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கால அவகாசத்தை வழங்கியது. எனினும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரைப் போன்று இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இது நாட்டின் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment