உலக இராணுவ குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சஜீவ, கயனி வெண்கலப் பதக்கங்களை வென்றனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

உலக இராணுவ குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சஜீவ, கயனி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

(நெவில் அன்தனி)

ரஷ்யாவில் நடைபெற்ற 58ஆவது உலக இராணுவ குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சஜீவ நுவன் குமார, கயனி நிசன்சலா களு ஆராச்சிலாகே ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தனர்.

49 கிலோ கிராம் பாரப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் முன்னணி குறைபார குத்துச் சண்டை வீரரான சஜீவ நுவன் குமார, உள்ளூர் போட்டிகளில் சிறந்த நுட்பத்திறனுடன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வந்துள்ளார்.

சர்வதேச அரங்கிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் குறிக்கோளுடன் நீண்ட காலம் காத்திருந்த 29 வயதான நுவன் குமார, உலக இராணுவ குத்துச் சண்டை சம்பியன்ஷிப் கால் இறுதிப் போட்டியில் மொஸாம்பிக் இராணுவத்தின் குத்துச் சண்டை வீரர் யாசின் நூர்தின் இசுபோவை எதிர்கொண்டார்.

இருவரும் கடுமையாக மோதிக் கொள்ளப்பட்ட இப் போட்டியில் மிகக் குறுகிய புள்ளிகள் வித்தியாசத்தில் நுவன் குமார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் பிரேஸில் இராணுவ வீரர் லியண்டர்சோ கொன்செய்காவோவை எதிர்கொண்ட நுவன் குமார தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 75 கிலோ கிராம் மத்திய பாரப் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா கெபிகாவாகை எ அரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட கயனி நிசன்சலா தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

கோல்ட் கோஸ்ட் 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற இராணுவ வீரர் இஷான் பண்டார 52 கிலோ கிராம் பாரப் பிரிவு கால் இறுதியில் திறமையாக போட்டியிட்ட போதிலும் 3ஆவது சுற்றில் காயமடைந்ததால் அவரால் போட்டியை தொடர முடியாமல் போனது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர் முஹம்மத் தாவூத் வெற்றி பெற்றார்.

இவர்களை விட சந்துனி ப்ரியதர்ஷனி ஹன்வெல்லகே, கஷ்பி திவன்க வீரக்கோன் ஆகியோர் முதல் சுற்றுகளில் திறமையாக சண்டையிட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறி தோல்வி அடைந்தனர். ஏனையவர்கள் முதல் சுற்றுடனேயே வெளியேறினர்.

அண்மைக் காலமாக இலங்கை குத்துச் சண்டைப் போட்டியாளர்கள் மிக திறமையாகப் போட்டியிட்டு 3 சர்வதேச பதக்கங்களை வென்றமை பாராட்டுக்குரியது என இலங்கை குத்துச் சண்டை சங்கத் தலைவர் டயான் கோமஸ் தெரிவித்தார்.

துபாயில் அண்மையில் நடைபெற்ற ஆசிய குத்துச் சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் நதீக்க ரணசிங்க வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

No comments:

Post a Comment