அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டம் : அமைச்சர் டக்ளஸ் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகு மீதேறி போராட்டம் : அமைச்சர் டக்ளஸ் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர கோருகின்றனர்

நூருல் ஹுதா உமர்

மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப் பணிப்பாளரின் செயலை கண்டித்தும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலையிட்டு தீர்வை பெற்றுத் தருமாறு கோரியும் அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் படகுகளில் ஏறி வித்தியாசமான போராட்டம் ஒன்றை அட்டாளைச்சேனை கடற்கரையில் நேற்று (24) மாலை முன்னெடுத்தனர்.

பதாதைகளை ஏந்திக் கொண்டு கடற்கரையில் ஊர்வலமாக பவனி வந்த மீனவர்கள் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

இதன்போது மீனவ சங்கங்களின் சார்பில் கருத்து தெரிவித்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களுக்கும் தங்களுக்கு நல்லது செய்யும் மீன்பிடி பரிசோதகர் எஸ். பாபுவுக்கும் தொடர்ந்தும் மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப் பணிப்பாளரினால் அநீதிகள் நடந்துவருவதாக குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த மீனவர்கள் சட்டவிரோதமான சுறுக்குவலை பாவனை எங்களின் பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. அவ்வாறு சட்டவிரோத செயலை செய்பவர்களுக்கு உதவும் விதமாக மீன்பிடித் திணைக்கள பிராந்திய உதவிப் பணிப்பாளர் செயற்பட்டு வருகிறார். சட்டநடவடிக்கைகளின் போதும் அதிகாரதுஷ்ப்பிரயோகம் செய்கிறார். 
உதவிப் பணிப்பாளர் கூறும் விடயங்களை ஏற்றுக் கொள்ளாமல் மீனவர்களின் பக்கம் நின்று எவ்வித கையூட்டல்களுக்கும் சோரம் போகாத அதிகாரி எஸ். பாபுவை இடமாற்றம் செய்துள்ளார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது இடமாற்றத்தை ரத்துசெய்து அறிவிக்க மீன்பிடி அமைச்சர் உடனடியாக முன்வர வேண்டும்.

வடக்குக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் இனிவரும் காலங்களில் கிழக்கிற்கும் நிறைவான சேவையை முன்கொண்டு செல்ல வேண்டும். 

இது விடயம் தொடர்பில் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிமிடம் பேசியுள்ளோம். நிரந்தரமான தீர்வை வழங்காது விட்டால் மீன்பிடியை நிறுத்தி விட்டு கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவிக்க தயாராக உள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment