யாழ் போதனா வைத்தியசாலைக்கான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

யாழ் போதனா வைத்தியசாலைக்கான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம்

(எம்.மனோசித்ரா)

யாழ் போதனா வைத்தியசாலைக்கான இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படுத்தப்பட்டால், இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் முறைப்பாடளிக்கும் என்று அதன் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழில் ஒரேயொரு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரே உள்ளார். இதற்காக அந்த பிரதேச மக்களுடைய குறிப்பாக வட மாகாண மக்களுடைய சுகாதாரத்தைக் கருத்திற் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த காலத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்னொரு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமனம் செய்வதற்கு பரிந்துரைத்திருந்தது.

இதன் பிரதிபலனாக பகிரங்க சேவை ஆணைக்குழுவானது, இந்த பரிந்துரைக்கு ஒப்புதலளித்திருந்தது. குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கு யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிக்சை நிபுணருக்கான வெற்றிடத்தை உருவாக்கி அங்கு இரண்டாவது பிளாஸ்டிக் விசேட வைத்திய நிபுணருக்கான நியமனத்தை பொது சேவை ஆணைக்குழுவானது உறுதி செய்துள்ளது.

பொதுச் சேவை ஆணைக்குழு இந்த நியமனத்தை அங்கீகரித்த போதிலும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகிய இருவரும் இந்த வைத்திய நிபுணரின் நியமனத்தை தடை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக விசேட வைத்திய நிபுணனொருவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரண்டாவது விசேட வைத்திய நிபுணராக பதவி வகிக்க விருப்பம் தெரிவித்த போதிலும், அவருடைய பதவியானது இன்னமும் சுகாதார அமைச்சினால் முன்மொழியப்படவில்லை.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்விடயத்தில் அதன் அதிருப்தியை வெளியிடுகின்றது. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவருக்கான வெற்றிடத்தை உருவாக்கினால் இது குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு முறைப்பாடளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment