வட கொரியாவில் அதிரடி மாற்றங்கள் : கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி, தென் கொரியாவுடன் உறவை மீண்டும் ஏற்படுத்தவும் விருப்பம் - News View

Breaking

Thursday, September 30, 2021

வட கொரியாவில் அதிரடி மாற்றங்கள் : கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி, தென் கொரியாவுடன் உறவை மீண்டும் ஏற்படுத்தவும் விருப்பம்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளும், தென் கொரியாவுடன் அமெரிக்காவின் கூட்டு போர்ப் பயிற்சியும் தங்கள் நாட்டுக்கு விரோதமான போக்கு என்று வட கொரியா நம்புகிறது.

வட கொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் செல்வாக்கு பெற்று வந்தார். கிம் ஜாங் அன்னின் ஆலோசகராகவும் விளங்கினார். அது மட்டுமின்றி, அவரது அரசியல் வாரிசாகவும் கருதப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை, இவர் இரண்டாம் நிலை தளபதி என மதிப்பிட்டது.

2018ம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது அங்கு சென்ற வட கொரிய தூதுக்குழுவில் இவர் வட கொரியாவின் முகமாக விளங்கினார். தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுக்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன்னுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இவர் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது இவருக்கு வட கொரியா அரசில் மிக முக்கியமான முடிவு எடுக்கும் அமைப்பான தேச விவகாரங்கள் ஆணைக்குழுவில் (எஸ்.ஏ.சி.) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதை அந்த நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது.

மற்றொரு அதிரடி மாற்றம், தென் கொரியாவுடன் இணக்கமான உறவை மீண்டும் ஏற்படுத்த வட கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், தென் கொரியாவுடன் மீண்டும் நேரடி தொலைபேசி தொடர்பை ஏற்படுத்த வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அறிவுறுத்தி உள்ளார்.

இது பற்றி வட கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் கூறுகையில், “தென் கொரியாவுடன் மீண்டும் நேரடி தொலைபேசிச் சேவையை (ஹாட்லைன்) மீட்டமைக்க தயார். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தயார். நாட்டின் தலைவர் அறிவுறுத்தி இருப்பதால் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தது.

அண்டை நாடான தென் கொரியாவுடன் மீண்டும் இணக்கமான உறவைப் பராமரிக்க விரும்பினாலும் அமெரிக்காவுடனான வட கொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை.

அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்பினாலும், வட கொரியா அசைந்து கொடுக்கவில்லை. வட கொரியா மீதான பகைமை உணர்வு, ராணுவ அச்சுறுத்தல்கள் மாறாத வரையில் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என்று வட கொரியா கூறுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளும், தென் கொரியாவுடன் அமெரிக்காவின் கூட்டு போர்ப் பயிற்சியும் தங்கள் நாட்டுக்கு விரோதமான போக்கு என்று வட கொரியா நம்புகிறது.

No comments:

Post a Comment