முஸ்லிம் சமூகம் இழந்த பொக்கிஷம் மர்ஹும் அஷ்ரஃப்...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

முஸ்லிம் சமூகம் இழந்த பொக்கிஷம் மர்ஹும் அஷ்ரஃப்...!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.

இந்த உலகில் பலர் தோன்றி மறைகிறார்கள் ஆனாலும் ஒரு சிலரே வரலாற்று பக்கங்களில் தங்களுக்கான இடத்தை பிடித்துக் கொள்கிறார்கள்.

அவ்வாறு ஒரு சமூகத்தின் விடுதலைக் குரலாக ஒலித்து மறைந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் இன்று வரை நினைவு படுத்தப்படுவது மாத்திரமின்றி இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் தனக்கான தனித்துவமான இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

சுதந்திர இலங்கையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பல முக்கிய அரசியல் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒரு தனி இனம்,அவர்களுக்கு தனித்துவமிருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல ஒரு குரல் தேவைப்பட்டது. தேசிய கட்சிகளின் பின்னால் சென்று கொண்டிருந்த ஒரு சமூகம் தனது தனித்துவத்தை தொலைத்துக் கொண்டு போவதை உணர்ந்த மர்ஹும் அஷ்ரஃப் அந்த சமூகத்தின் உரிமைக் குரலாக தனது குரலை உயர்த்தினார். முஸ்லிம் சமூகமும் அரசியலில் விழிப்படைய ஆரம்பித்தது.

கிழக்கில்,சம்பாந்துறையில் பிறந்து இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்திற்காக பாடுபட்டு, தன் உயிரையும் தியாகம் செய்தார் என்பது வரலாறு.... இவரின் வரலாறு முஸ்லிம் சமூகத்தில் அடிக்கடி ஞாபகப் படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்றைய அரசியல் சூழலில் உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மர்ஹும் அஷ்ரஃப் மறைந்து 21 வது வருடம் பூர்த்தியாகிறது.

முஸ்லிம்களின் குரலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு சமூக உரிமைக்காக குரல் கொடுத்தார். தனக்கான வாய்ப்புகளை தக்க நேரத்தில் பயன்படுத்தி காரியம் சாதிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.

சிறிய,சிறுபான்மை கட்சிகள் பாராளுமன்றம் செல்ல தடையாகவிருந்த 12.5% தேர்தல் வெட்டுப்புள்ளியை 5% குறைத்து சாதித்தார். தூரநோக்கோடு அரசியலை முன்னெடுத்தார்.

தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தை கொண்டு செல்லும் நோக்கில் தூர நோக்கு அரசியலை முன்னெடுத்தார். அதன் வெளிப்பாடாகவே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்தாபித்தார். குறுகிய காலத்திற்குள் நீண்ட கால திட்டங்களை வகுத்து செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஒரு கட்டுக் கோப்போடு வளர்த்தார். தலைமைக்கு கட்டுப்படாதவர்களை,அவர்கள் தனது நெருங்கிய நண்பராக இருந்த போதும் கட்சியில் இருந்து நீக்கினார்.

அன்றும் அஷ்ரஃப் பல சவால்களை எதிர் கொண்டார். பேரினவாதிகளால் மாத்திரமின்றி தன் சமூகத்தில்,தன்னோடு பயணித்தவர்கள் பிரிந்து சென்று அஷ்ரஃப்க்கு சவாலாக மாறினார்கள். திடிர் என நிகழ்ந்த அன்னாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு இன்றுவரை பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவினை தொடர்ந்து இன்று வரையான 21 வருட முஸ்லிம் அரசியலில் நடப்பவைகள் அன்னாரை அடிக்கடி நினைவுபடுத்தி கவலைப் படும் நிலையையே தோற்றுவித்திருக்கிறது.

காலத்திற்கு ஏற்ப அரசியல் சூழ்நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படும், அவ்வாறான நிலமைகளில் தீர்க்கமான முடிவுகளை எடுத்து அரசியல் ரீதியாக சமூகத்தை வழிநடாத்திச் செல்லக்கூடிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அஷ்ர ஃப் தனது பொறுப்புணர்ந்து தன்னால் முடிந்தளவு நல்ல முறையில் செயற்பட்டார்.

அன்னாரின் மறைவின் பின்னரான முஸ்லிம் அரசியலை நோக்கினால், இன்றுவரை சவால்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மர்ஹும் அஷ்ரஃப் அவர்களால் சமூக விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி காலத்திற்கு காலம் பேரினவாத கட்சிகளால் உடைக்கப்பட்டன.

அதன் தொடரிலேயே இன்றைய முஸ்லிம் அரசியல் அல்லது முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை பார்க்கலாம்.

முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பல கட்சிகள் உருவாகி அதன் ஒற்றுமை சீர்குலைக்கப்படுவதை அஷ்ரப் விரும்பவில்லை. பல கட்சிகள் தோன்றுவது சமூகத்தை பலவீனப் படுத்தும் என்பதோடு ஒரு கட்சியில் பயணிப்பேதே சமூகத்திற்கு பலம் என கருதினார். அஷ்ரப் காலத்தில் அவரோடு இருந்து பிரிந்து பேரினவாதிகளால் அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டவர்களால் கூட புதிய கட்சி உருவாக்கி செயற்படமுடியவில்லை.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவரின் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தந்திரமாக சிலரை பேரினவாதிகள் பிரித்தெடுத்து முஸ்லிம் சமூகத்திற்குள் சில கட்சிகளை தோற்றுவித்திருக்கிறார்கள். துரோகத்தினால் உருவான கட்சிகளில் நிலையை பார்த்தால் அங்கு துரோகம்தான் நிலைத்திருக்கும் என்பதை இன்று கண்கூடாக பார்க்கலாம்.

சமகால முஸ்லிம் அரசியலை சற்று நோக்கி, முஸ்லிம் கட்சி தலைவர்களின் நிலையை பார்த்தால் ஒருவர் சூழ்நிலைக் கைதி மற்றொருவர் சிறைக் கைதி . இக் கட்சிகள் எதிர் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தினாலும் இதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த அரசியல் அமைப்பின் 20 வது திருத்தத்திற்கு தலைவர்கள் எதிர்த்தபோதும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இன்றுவரை தலைவர்களின் அனுமதியின்றி பல சட்டதிருத்தங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி என்பதனால் அதன் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் தேசிய ரீதியாக இந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டமூலங்களின் பாதகத்தன்மைகளை பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்துவது மாத்திரமின்றி அவ்வாறான சட்டமூலங்களுக்கு எதிராகவும் வாக்களித்தும் வருகிறார். ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 வது திருத்தத்திற்கு கட்சியின் அனுமதியின்றி ஆதரவு வழங்கிய பின்னர் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தாங்கள் இனிவரும் காலங்களில் பாராளுமன்றத்தில் தலைவரின் தலைமையில் கூட்டாக செயற்படுவதாக வாக்குறுதியளித்திருந்தார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன்னிப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான சூழ்நிலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பான தேசிய அமைப்பாளர் பதவியும் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்டது. இது பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தாலும் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட இவர் தலைவருடன் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும், கட்சிக்குள்ளும் இணைந்து செயற்படுவார் என நம்பப்பட்டது.

ஆனாலும், கடந்த பாராளுமன்ற அமர்வில் கொண்டுவரப்பட்ட நிதி தொடர்பான திருத்தச்சட்டமூலத்திற்கு 2/3 பெறும்பான்மை அவசியமில்லாத சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு இவ் சட்டமூலத்தை நிறைவேற்றுப் பெரும்பான்னை இருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தபோது, தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை காணமுடிந்தது. இதனூடாக கட்சி உயர்பீடத்திற்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளார்கள்.

மனசாட்சிபடி வாக்களிக்க முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அனுமதி கோரினார்களாம்.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய இவ் அரசாங்கள் முஸ்லிம்கள் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு ஜனாஸா எரிப்பு தொடக்கம் காதி நீதிமன்ற ஒழிப்பு என தொடர்ந்து கொண்டு செல்லும் போது இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மனசாட்சி என்ன செய்துகொண்டிருந்தது,இருக்கிறது என சமூகம் இவர்களை பார்த்து கேட்கவிரும்புகிறது.

அரசாங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து முட்டுக் கொடுக்கும் இவர் சொல்வது, தங்களின் பிராந்திய ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆதரவு கொடுப்பதாக.... அப்படி என்றால் இவர்கள் பிராந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட்டார்களா என்று பார்த்தால் அதுவுமில்லை... அவை அடுத்த தேர்தலிலும் அதன் பின்னர் அமையும் அரசாங்கத்திலும் இணைவதற்காக முன்வைக்கப்படும் நியாயப்படுத்தல் கோசங்களாக தொடர்ந்து கொண்ட இருக்கப்போகிறது.

இவர்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் முடியவில்லை, பறிக்கப்படும் உரிமைகளையாவது தடுப்பார்கள் என நினைத்தால் அதுவுமில்லை. இவர்களால் முடிந்தது ஒரு சில கொந்துராத்தும். சில தென்னங்கன்றுகளும்தான். இதுதான் இவர்களின் மனசாட்சி.

இவ் அரசாங்கத்தின் இறுதி காலம் வரை தொடர்ந்து இவ்வாறு கட்சி,தலைமை அங்கிகாரமின்றி வாக்களிக்கப் போகிறார்களா? இதற்கு கட்சியும், தலைமையும் தொடர்ந்து அனுமதியளிக்குமா? தலைவர் ஒரு பக்கமும், மற்றைய நான்கு பேரும் இன்னுமொரு பக்கமுமாக இருந்து கொண்டு சமூக அரசியலை காத்திரமாக முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

தல ஒரு பக்கமும் வால்கள் இன்னொரு பக்கமும் இருப்பது வாக்களித்த மக்களையும், முஸ்லிம் சமூத்தையும் நகைப்புக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கவலையான விடயமாகும் . தொடர்ந்தும் மக்களை ஏமாற்றலாம் என இவர்கள் நினைத்துக் கொண்டால் மக்களின் தீர்ப்பு இந்த வால்களை மாத்திரமின்றி இவர்களை ஆடவிட்டு, இவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத தலையையும் சேர்த்து பாதிக்கலாம். சமூகமும் இவ் வால்கள் தொடர்பாக எதிர்காலத்தில் சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு,இவ் வால்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் . அப்போதுதான் இவர்களின் வழிமுறையை பின்பற்றி எதிர்கால அரசியலில் ஏனையவர்களும் செயற்படுவதை தவிர்க்கமுடியும்.

முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் தவிர்ந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் கடந்த காலம் தொட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கி பாரிய சவால்களின் போது இவர்கள் தலைவரோடு சேர்ந்து இயங்கவில்லை... ஜனாஸா எரிப்பு உற்பட ரவூப் ஹக்கீம், தன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றி வீதிக்கு இறங்கி போராடியது மாத்திரமின்றி ராஜதந்திர ரீதியாகவும் தனியாகவே செயற்பட்டு தன்னாலான காரியங்களை முஸ்லிம் சமூகத்திற்கு முன்னெடுத்திருந்ததை பார்க்கலாம். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி தலைவர் செயற்படும் போது, அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளைகளாக இருக்கவிரும்பி தலைவருடன் சேர்ந்து செயற்படாது ஒதுங்கியிருப்பதைப் பார்க்கலாம்.

இவ் அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய முக்கிய பௌத்த மதகுருக்கள் மற்றும் பேரினவாத செயற்பாட்டாளர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள், வாக்களித்த மக்களும் இவ் அரசாங்கத்தின் போக்கினை பார்த்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் தவிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி அடிமைப்பட்டுக்கிடப்பதை பார்க்கலாம்.

முழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிக் கொண்டவர்களைப் போலே இவர்களும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே மர்ஹும் அஷ்ரஃப் மறைந்த இத் தினத்தில் அவரின் கொள்கைகளுக்கு உயிரூட்டி , நாம் பெறவேண்டிய உரிமைகள், நம்மிடம் இருந்து பறிக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்கும் சாத்தியமான வழிகளையும் ,சாணக்கியமான நகர்வுகளையும் முன்னெடுக்கவேண்டும் என்பதோடு, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கட்டுக்கோப்புடன் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment