வெளிக்கள பொறிமுறையை ஒருபோதும் அனுமதியோம், அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு : ஜெனீவா அறிவிப்புக்களுக்கு பதில் வழங்கினார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

வெளிக்கள பொறிமுறையை ஒருபோதும் அனுமதியோம், அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு : ஜெனீவா அறிவிப்புக்களுக்கு பதில் வழங்கினார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக் கூடிய எந்தவொரு வெளியகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் முழுமையாக நிராகரிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருக்கின்றார்.

சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பின்றி ஏற்படுத்தப்படக் கூடிய வெளியகப் பொறிமுறைகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன் அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர், கொரோனா வைரஸ் பவல் நெருக்கடிக்கு மத்தியிலும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்களின் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பிலும் மனித உரிமைகள் பேரவையில் எடுத்துரைத்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், இதன்போது ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வில் இலங்கை சார்பில் உரை நிகழ்த்திய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையுடனும் அதன் மனித உரிமைகள் சார் கடப்பாடுகளுடனும் தொடர்ச்சியானதும் வலுவானதுமான ஒத்துழைப்பினை வழங்கிச் செயற்படத் தயாராக இருக்கின்றோம்.

இலங்கை மண்ணிலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டது. அதனூடாக நாம் எமது மக்களின் நலனை முன்னிறுத்தி நாட்டில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ளோம்.

எமது ஜனநாயக மரபுகளை நாம் உறுதியாகப் பேணி வந்திருக்கின்றோம்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் என்பன அதிகளவிலான வாக்காளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. அதேபோன்று இயலுமானவரை விரைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதிலும் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கின்றது.

'காயங்களை ஆற்றுதல்' என்ற அடிப்படையிலேயே நாம் போருக்குப் பின்னரான மீட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் தீவிரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 16 பேர் அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

அதேவேளை போருக்குப் பின்னரான கண்ணி வெடி அகற்றல், புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களின் வெற்றியானது, தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டிருக்கும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நல்லிணக்கத்தை முன்நிறுத்திய உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புக்களுடன் இணைந்து காணாமல் போனோரின் பட்டியலைத் தயாரித்திருக்கின்றது. அதேபோன்று இவ்வருடத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தினால் 3775 இழப்பீட்டுக் கோரிக்கைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் அதன் 8 அம்ச செயற்றிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் சமாதானம், நீதியை வலுப்படுத்துவதற்கான வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக அதனைத் திருத்தியமைப்பதற்கும் பிரத்யேகமாக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அக்குழுவினால் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை விசாரணை செய்யவும், நிலுவை வழக்குகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்குமென விசேட ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூறல் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், முந்தைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்காகவும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

அவ்விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஏற்கனவே ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்கும் நிலையில் அதன் இறுதி அறிக்கை அடுத்த 6 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்.

மேலும் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் குற்றவாளிகள் மீது இலங்கை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அதனுடன் தொடர்புடைய அனைத்து சட்டநடைமுறைகளையும் உரியவாறு பின்பற்றி வருகின்றது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அனைத்து மதங்களைச் சார்ந்த இலங்கையர்களையும் பாதுகாப்பதிலும் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் செயற்படும்.

அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக நிறுவப்படக் கூடிய எந்தவொரு வெளியகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளையும் நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். அதேவேளை உள்ளப் பொறிமுறைகளின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏனெனில் இத்தகைய நடைமுறைகள், ஏற்கனவே 30/1 தீர்மானத்தின் ஊடாக அனுபவப்பட்டதைப் போன்று எமது சமூகத்தைத் துருவமயப்படுத்தி விடக்கூடும். மனித உரிமைகள் பேரவை அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பின்றி ஏற்படுத்தப்படக் கூடிய வெளியகப் பொறிமுறைகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது என்பதுடன் அது அரசியல் மயப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

குறிப்பாக உலகின் பல பகுதிகளில் மனிதாபிமான மற்றும் ஏனைய ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக வளங்கள் தேவைப்படும் நிலையில், அவற்றை இம்முயற்சிகளில் செலவிடுவது அநாவசியமானதாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தற்போது ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் மற்றும் சவால்களின் கீழ் பொதுமக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதை அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகக் கருதுகின்றோம். நாம் சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதை ஏற்றுக் கொள்வதில் வெளிப்படைத்தன்மையைப் பேணுகின்றோம்.

எனவே பொறுப்பானதும் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததுமான அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளில் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment